தமிழ்நாடு

சவுக்கு சங்கர் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய மனு தள்ளுபடி

யூடியூபர் சவுக்கு சங்கர் வீடு தாக்கப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சவுக்கு சங்கர் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய மனு தள்ளுபடி
சவுக்கு சங்கர் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய மனு தள்ளுபடி
துாய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தில் ஊழல் நடப்பதாகவும், அதன் பின்னணியில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளதாகவும் சவுக்கு சங்கர் சில ஆதாரங்களை வெளியிட்டார். தொடர்ந்து, தூய்மை பணியாளர்கள் குறித்து யூடியூபர் சவுக்கு சங்கர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தூய்மை பணியாளர்கள் சிலர் சவுக்கு சங்கர் வீட்டில் கடந்த மார்ச் 24-ம் தேதி அத்துமீறி நுழைந்து வீடு முழுவதும் கழிவு நீரை ஊற்றினர். இச்சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைப்பெற்று வருகிறது

இந்நிலையில் இந்த விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி சவுக்கு சங்கரின் தாயார் கமலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் ஆதரவாளரான வாணிஸ்ரீ என்பவர் தான் 20 நபர்களை அழைத்து வந்து வீடு புகுந்து தாக்கி மிரட்டல் விடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதில் அரசியல் மற்றும் காவல்துறையினர் தொடர்பு இருப்பதால் விசாரணை நியாயமாக நடக்காது என கருதுவதால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், காவல்துறைக்கு தெரிந்தே தான் தங்கள் வீடு தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக காவல்துறை, தாக்குதல் நடத்தியவர்களுடன் பேசும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் உள்ளதாக தெரிவித்தார். சிபிசிஐடி தரப்பில் சவுக்கு சங்கர் வீட்டை சுற்றி இருந்த சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டு இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டு அதில் 21 பேர் கைது செய்யபட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 12 வாரத்தில் புலன் விசாரணை விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிட்டு சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தார்.