தமிழ்நாடு

அமைச்சர் சேகர்பாபு வீடு உள்பட 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சென்னையில் பரபரப்பு!

அமைச்சர் சேகர்பாபு, பாடகி சின்மயி, பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி ஆகியோர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் சேகர்பாபு வீடு உள்பட 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சென்னையில் பரபரப்பு!
Bomb threats to 3 places including Minister Sekarbabu's house
தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் பொது இடங்களுக்கு மின்னஞ்சல் (இ-மெயில்) வழியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவங்கள் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவின் இல்லம் உட்படப் பல பிரபலங்களின் வீடுகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

அமைச்சர் மற்றும் பிரபலகளுக்கு அச்சுறுத்தல்

இன்று தமிழக டி.ஜி.பி. அலுவலகத்திற்கு ஒரு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் இல்லத்திற்கும், திரைப்படப் பாடகி சின்மயி, பா.ஜ.க. நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி ஆகியோரின் வீடுகளுக்கும் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக அந்தந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளில் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிரச் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில், அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இருப்பினும், இந்த மிரட்டல் குறித்துப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்றும் தொடர்ந்த புரளிகள்

இதேபோல், நேற்றும் (நவம்பர் 11) நடிகர்கள் அஜித், எஸ்.வி. சேகர், நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோரின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வந்த இந்த மிரட்டலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அதுவும் புரளி எனத் தெரியவந்தது.

பாதுகாப்பு அதிகரிப்பு

டெல்லியில் நேற்று முன்தினம் (நவம்பர் 10) கார் குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, சென்னை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் மிரட்டல்களால் பதற்றம் நிலவும் நிலையில், போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மிரட்டல் விடுக்கும் நபர்களைப் பிடிக்கச் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடைபெற்று வருகிறது.