தமிழ்நாடு

இதுக்கு ஒரு எண்டே இல்லையா? சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுக்கு ஒரு எண்டே இல்லையா? சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக, பாஜக போன்ற பல்வேறு கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தவெக தலைவர் விஜய் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன், திமுக கட்சியைச் சேர்ந்தவர் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து போலீசார் மோப்ப நாய் உதவியுடன் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
இச்சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, இதேபோன்று சென்னை அண்ணா பல்கலைக்கழத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் புரளி வந்தது குறிப்பிடத்தக்கது.