சென்னை தி நகரில் உள்ள தமிழக பாஜக தலைமையகத்தில் மகளிர் தினத்தை ஒட்டி பாஜக மாநில மகளிர் அணி சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக பாஜக மாநில மகளிர் அணி தலைவி உமாரதி ராஜன் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் பாஜக மருத்துவ அணி சார்பில் பெண்களுக்கு மருத்துவ முகாம் , பாரம்பரிய முறைப்படி பெண்களுக்கு வலையல் அணிவித்து மருதாணி வைத்து மகளிர் தினத்தை கொண்டாடினார்கள்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக மாநில மகளிர் அணி தலைவி உமாரதி ராஜன் பேசியதாவது, “பெண்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும் சுயமாக நிற்க வேண்டும் என்பதற்காகவும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
மேலும் படிக்க: சிலிண்டர் புக் செய்ய கால் பண்ணாலும் இந்தி மொழியா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்
மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் 20 லட்சம் ரூபாய் கடன் , புத்தொழில் மூலம் தொழில் முனைவோராக மாறுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்துள்ளார். தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. இதனை மறைப்பதற்காகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜகவினர் என்ன செய்கிறார்கள்? அவர்களை எப்படி கைது செய்யலாம்? என்று சிந்தித்து வருகிறார்.
பாலியல் வன்கொடுமை குற்றங்களை முதலமைச்சர் தடுக்க தவறிவிட்டார். திமுகவின் இந்த ஆட்சி தோல்வி அடைந்த ஆட்சி” என்று அவர் விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் சமீபகாலமாக பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. சிறுமிகள் முதல் பெண் காவலாளிகள் வரை அனைவரும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பள்ளிகளில் கல்வி வழங்குவதன் மூலம் தலைமுறைகளை உருவாக்கும் ஆசிரியர்களே மாணவர்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவது வேதனை அளிப்பதாக இருப்பதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.