தமிழ்நாடு

சுதந்திர போராட்ட தியாகிகள் நிலத்தில் மருத்துவக் கழிவு.. ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு..!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் மருத்துவக் கழிவுகளை விடுவதை எதிர்த்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுதந்திர போராட்ட தியாகிகள் நிலத்தில் மருத்துவக் கழிவு.. ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு..!
சுதந்திர போராட்ட தியாகிகள் நிலத்தில் மருத்துவக் கழிவு.. ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு..!

சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவண்ணாமலை மாவட்ட சுதந்திர போராட்ட தியாகிகள் வீரமரணமடைந்தோர் குடும்ப நல சங்கத்தின் தலைவர் திருஞானசம்மந்தமூர்த்தி தாக்கல் செய்த மனுவில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகளுக்காக தமிழக அரசு திருவண்ணாமலை வெங்கிக்கல் கிராமத்தில் நிலம் ஒதுக்கியுள்ளது.

இந்த நிலத்திற்கு அருகில் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. இந்த நிலையில் மருத்துவமனையின் கழிவு நீரை தியாகிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் உள்ள காலி இடங்களில் விடுவதுடன், கழிவுகளையும் அந்த நிலத்தில் கொட்டுகிறார்கள். இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு நோய்களும் பரவுகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக இதே நிலைதான் உள்ளது. இது குறித்து பலமுறை  மனுக்களை மாவட்ட ஆட்சியருக்கும், மருத்துவமனை நிர்வாகத்திற்கும் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, எங்கள் மனுக்களை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டருக்கும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, மனுதாரரின் மனுவை பரிசீலித்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி உத்தரவிட்டது. இந்த நிலையில், உத்தரவை அமல்படுத்த வில்லை எனக்கோரி திருஞானசம்மந்தமூர்த்தி நீதிமன்ற அவமதிப்ப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி.நந்தகோபாலன் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில்  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 28 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.