தமிழ்நாடு

பெண் காவலருக்கு பாலியல் துன்புறுத்தல்: வெற்று விளம்பரங்களில் லயித்துக் கிடக்கும் முதல்வர்- அண்ணாமலை விமர்சனம்

சென்னை பழவந்தாங்கலில் பெண் காவலருக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் வெற்று விளம்பரங்களில் லயித்துக் கிடப்பதாக குற்றம்சாட்டினார். 

பெண் காவலருக்கு பாலியல் துன்புறுத்தல்: வெற்று விளம்பரங்களில் லயித்துக் கிடக்கும் முதல்வர்- அண்ணாமலை விமர்சனம்
பெண் காவலருக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தலுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகர காவல் நிலையத்தில் 25 வயதான பெண் காவலர் ஒருவர் நுண்ணறிவு பிரிவு சமூக வலைதளங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் பணி முடிந்து சென்னை எழும்பூரில் இருந்து பழவந்தாங்கலுக்கு மின்சார இரயிலில் சென்றுள்ளார். தொடர்ந்து, பழவந்தாங்கல் ரயில் நிலையம் வந்ததும் நடைமேடையில் இருந்து தனது வீட்டை நோக்கி சென்றுள்ளார்.

அப்போது, மர்ம நபர் ஒருவர் அந்த பெண் காவலரை பின்தொடர்ந்துள்ளார். இதனால் அச்சமடைந்த அந்த பெண் காவலர் வேகமாக செல்ல முயன்ற நிலையில் அந்த மர்ம நபர் அவரை கீழே தள்ளி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த நபரின் கையைக் கடித்த பெண் காவலர் கூச்சல் போட்டுள்ளார்.

சத்தம் கேட்டு அப்பகுதியில் கூடிய பொதுமக்கள் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அந்த நபர் மதுபோதையில் இவ்வாறு செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ரயில்வே போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்நபரை கைது செய்தனர்.  பெண் காவலரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், சென்னை பழவந்தாங்கல் இரயில் நிலையத்தில், பெண் காவலர் ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது.  அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ சமூகவிரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை. ஒட்டு மொத்த அரசு இயந்திரமே செயலிழந்து கிடக்கிறது. சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. முதலமைச்சர் வெற்று விளம்பரங்களில் லயித்துக் கிடக்கிறார். 

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி வெளிவருகிறது. அரசுத் தரப்பில் இருந்தும், காவல்துறை தரப்பில் இருந்தும் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எந்தப் பகுதியிலுமே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது, ஒவ்வொரு குடும்பத்தையும் கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

திமுக அரசும், காவல்துறையும் செயல்படாமல் இருப்பதைத் தொடர்ந்தால், பொதுமக்களே தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இது சமூகத்தை எங்கு கொண்டு செல்லும் என்பதை உணர்ந்திருக்கிறாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்? என்று குறிப்பிட்டுள்ளார்.