தமிழ்நாடு

மக்கள் நீதி மய்யம் பெண் நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய ஆட்டோ ஓட்டுநர்.. காவல்துறையினர் விசாரணை!

கூகுள் மேப்பை ஆப் செய்துவிட்டு, வேறு பாதையில் ஆட்டோ ஓட்டுநருக்கும், பெண் நிர்வாகிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறிய நிலையில், மக்கள் நீதி மய்யம் பெண் நிர்வாகி மற்றும் ஆட்டோ ஓட்டுனர் மாறி மாறித் தாக்கிக் கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மக்கள் நீதி மய்யம் பெண் நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய ஆட்டோ ஓட்டுநர்.. காவல்துறையினர் விசாரணை!
மக்கள் நீதி மய்யம் பெண் நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய ஆட்டோ ஓட்டுநர்.. காவல்துறையினர் விசாரணை!
மக்கள் நீதி மய்யம் கட்சியில் மாநில மகளிர் அணி செயலாளராக இருப்பவர் சினேகா மோகன் தாஸ். இவர் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாகச் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று காலைச் சினேகா மோகன் தாஸ் அவரது வடமாநில தோழி ஒருவருடன் திநகரிலிருந்து மாநிலக் கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றிற்கு செல்ல ஆன்லைன் செயலி மூலமாக 170 ரூபாய்க்கு ஆட்டோவைப் புக் செய்துள்ளார்.

பின்னர் ஆட்டோவில் சினேகா மோகன் தாஸ், அவரது தோழியும் பயணித்து வந்தபோது, அந்த ஆட்டோ ஓட்டுனர் கூகுள் மேப்பை ஆப் செய்துவிட்டு சுற்றி வந்ததாகவும், ஆட்டோவை அதிவேகமாகவும் ஓட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சினேகா மோகன் தாஸ் ஆட்டோ ஓட்டுனர் இடம் கேட்டபோது 170 ரூபாய்க்கு அப்படி தான் செல்ல முடியும் எனவும் மிகவும் ஆபாசமாகக் கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சினேகா மோகன் தாஸ் அந்த ஆட்டோ ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, சாந்தோம் அருகே ஆட்டோவை நிறுத்திக் கீழே இறங்குமாறு ஒருமையில் ஆட்டோ ஓட்டுனர் பேசியதாகத் தெரிகிறது.

உடனடியாகச் சினேகா மோகன் தாஸ் காவல் கட்டுப்பாட்டு அறைக்குப் போன் செய்து, ஆட்டோவில் இருந்த சாவியை எடுக்க முயன்றபோது அந்த ஆட்டோ ஓட்டுனர் சினேகா மோகன் தாஸை தாக்கியதாகத் தெரிகிறது.

பின்னர் இதனால் மேலும் கோபம் அடைந்த சினேகா மோகன் தாஸ் கைகளாலும், செருப்பாலும் அந்த ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியதால் மோதல் முற்றி அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, ஆட்டோ ஓட்டுநரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாகச் சினேகா மோகன் தாஸ் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் நடத்திய முதல் கட்டமாக விசாரித்தபோது ஆட்டோ ஓட்டுனரின் பெயர் பிரசாத் என்பதும் தெரியவந்தது.

காயமடைந்த சினேகா மோகன் தாஸ் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார்,

அப்போது பேசிய அவர், தான் ஆம்புலன்ஸ் டிரைவர் எனவும் தனக்கு எல்லா வழியும் தெரியும் எனவும் கூகுள் மேப்பை ஆப் செய்து விட்டு மிகவும் அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டியதாகவும், இதுகுறித்து கேட்டபோது தனது உடை குறித்தும் ஊரு விட்டு ஊரு வந்து பேசுகிறீர்களா என மிகவும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி ஆட்டோ ஓட்டுனர் பேசியதாகவும், இது மட்டுமின்றி தன்னை தாக்கியதால் தான் பதிலுக்குத் தாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

தங்களுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பெண்களுக்கு எங்கே பாதுகாப்பு உள்ளது எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும் ஆன்லைன் செயலி நிறுவனங்கள் ஆட்டோ வைத்திருப்பவர்கள் எல்லாம் வாகனங்கள் இயக்க அனுமதி கொடுப்பதாகவும் பெண்களுக்குப் பாதுகாப்பு குறித்து எந்த நிறுவனங்களும் யோசிக்கவில்லை எனவும் இந்தக் கட்டுப்பாடுகள் எல்லாம் விதிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

முறையான யூனிபார்ம் அணியாமலும், இது போன்ற செயலிலும் ஈடுபட்ட அந்த ஆட்டோ ஓட்டுனரின் லைசென்ஸை கேன்சல் செய்து அவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.