தமிழ்நாடு

வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.. சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்!

சுதந்திர தின விழா ஒத்திகையையொட்டி, சென்னையில் 3 நாட்களுக்கு போக்குவரத்துக்கு மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.. சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்!
Traffic changes on major roads in Chennai!
நாட்டின் 79-வது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15-ஆம் தேதி சென்னை, செயின்ட் ஜார்ஜ் கோட்டை தலைமைச் செயலகத்தில் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஒத்திகைகள் ஆகஸ்ட் 8, 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. இந்த ஒத்திகையையொட்டி, மேற்கண்ட மூன்று நாட்களிலும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை சென்னையில் சில முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

வாகனப் போக்குவரத்து தடை

இந்த மூன்று நாட்களிலும் காலை 6 மணி முதல் 10 மணி வரை, உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவுச்சின்னம் வரை உள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச் சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வரை உள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை ஆகிய சாலைகளில் அனைத்து வாகனங்களின் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

மாற்றுப் போக்குவரத்து ஏற்பாடுகள்

பாரிமுனை நோக்கிச் செல்லும் வாகனங்கள்: காமராஜர் சாலையில் இருந்து ராஜாஜி சாலை வழியாகப் பாரிமுனை நோக்கிச் செல்லும் வாகனங்கள், உழைப்பாளர் சிலையிலிருந்து வாலாஜா அண்ணாசாலை, மன்ரோ சிலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை (NFS Road) வழியாகச் செல்லலாம்.

அண்ணாசாலையிலிருந்து பாரிமுனை நோக்கிச் செல்லும் வாகனங்கள்: இந்த வாகனங்கள் முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை (NFS Road) வழியாகச் செல்லலாம்.

ராஜாஜி சாலையில் இருந்து காமராஜர் சாலைக்குச் செல்லும் வாகனங்கள்: தலைமைச் செயலகம் வழியாகச் செல்லும் வாகனங்கள், பாரிமுனை, வடக்கு கோட்டை பக்க சாலை (NFS Road), ராஜா அண்ணாமலை மன்றம், முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணாசாலை, மன்ரோ சிலை மற்றும் வாலாஜா சாலை வழியாகச் செல்லலாம்.

இந்த போக்குவரத்து மாற்றங்களுக்கு வாகன ஓட்டிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.