தமிழ்நாடு

நீதிபதி மீது காலணி வீச முயற்சி: முறைசெய்யும் நீதித்துறையை கறைசெய்யும் களங்கமாகும்- வைரமுத்து கண்டனம்!

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணியை வீச முயன்ற சம்பவத்திற்குக் கவிஞர் வைரமுத்து தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

நீதிபதி மீது காலணி வீச முயற்சி: முறைசெய்யும் நீதித்துறையை கறைசெய்யும் களங்கமாகும்- வைரமுத்து கண்டனம்!
Vairamuthu condemns
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணியை வீச முயன்ற சம்பவத்திற்குக் கவிஞர் வைரமுத்து தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இந்தச் செயலுக்குப் "பிற்போக்குத்தனமே அடிப்படை" என்றும், இது "நீதித்துறையைக் கறைசெய்யும் களங்கம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலணி வீச முயற்சி

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று (அக்.06) வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தபோது, ஒரு வழக்கறிஞர் நீதிபதிகள் அமர்ந்திருந்த மேடையை நெருங்கி, தனது காலணியைக் கழற்றித் தலைமை நீதிபதியை நோக்கி வீச முயன்றார். உடனடியாகக் காவலாளிகள் அவரைத் தடுத்து நிறுத்தினர்.

வைரமுத்துவின் கண்டனப் பதிவு

இந்தச் சம்பவத்திற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவு:

"உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் பி.ஆர்.கவாய் மீது அநாகரிகத்தை வீசமுயன்றது கண்டு அதிர்ந்துபோனேன்.

இது முறைசெய்யும் நீதித்துறையைக் கறைசெய்யும் களங்கமாகும். வரம்புமீறிய வழக்கறிஞரை வன்மையாகக் கண்டிக்கிறேன். பிற்போக்குத்தனம்தான் இந்த அவமானச் செயலுக்கு அடிப்படை என்று அறிகிறேன். தென்னிந்தியாவில் பிற்போக்குச் சக்திகளைப் பிடரிபிடித்துத் தடுத்து நிறுத்தியதைப்போல வடஇந்தியாவில் செய்யத் தவறிவிட்டார்கள். அந்தச் சாத்திரத்தின் ஆத்திரம்தான் இது.

காலில் அணியவேண்டியதைக் கையில் அணிந்தபோதே அவர் அறிவழிந்துபோனார் என்று அறிய முடிகிறது. அதை மென்மையாகக் கையாண்ட நீதியரசரின் சான்றாண்மையைப் பெரிதும் போற்றிப் பெருமிதம் கொள்கிறோம். நீதியரசரின் மாண்பு அவரை மன்னித்துவிட்டது. வீச முயன்ற பொருளும் அவரிடமே ஒப்படைக்கப்பட்டு விட்டது.

வீசிய பொருளைக்கூட மறந்துவிடலாம் அவர் பேசியபொருளை மறந்துவிட முடியாது. அது நாட்டின் பெரும்பான்மை மக்களைக் காலங்காலமாய்க் கழுத்தில் மிதித்து அழுத்திக் கொண்டிருக்கும் பழைய பொருளாகும். பழையன கழிய வேண்டாமா?" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.