தமிழ்நாடு

அரவிந்த் கண் மருத்துவமனை: ’பத்மஸ்ரீ’ நம்பெருமாள் சாமி காலமானார்! முதல்வர், EPS இரங்கல்

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் முன்னாள் தலைவர் நம்பெருமாள் சாமி மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேஷன் உட்பட அரசியல் தலைவர்கள் பலர் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

அரவிந்த் கண் மருத்துவமனை: ’பத்மஸ்ரீ’ நம்பெருமாள் சாமி காலமானார்! முதல்வர், EPS இரங்கல்
Aravind Eye Hospital Mourns Demise of Former Chairman Dr.Namperumalsamy
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் முன்னள் தலைவர் நம்பெருமாள் சாமி இன்று காலமானார். மருத்துவத்துறையில் இவர் ஆற்றிய சேவையினை கௌரவிக்கும் விதமாக மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது.

இந்தியாவின் முதல் விழித்திரை சிறப்பு மருத்துவர்:

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “புகழ்பெற்ற மருத்துவரும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் மதிப்புறு தலைவருமான 'பத்மஸ்ரீ' திரு. நம்பெருமாள்சாமி அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையுற்றேன்.

தென் தமிழ்நாட்டில் மிக எளிய வேளாண் குடும்பத்தில் பிறந்து, மதுரை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பையும், அமெரிக்காவில் மேல்படிப்பையும் முடித்து இந்தியாவின் முதல் விழித்திரை சிறப்பு மருத்துவர் என்ற பெயர் பெற்றவர் நம்பெருமாள்சாமி அவர்கள். ஏழை எளியோருக்கும் கண்மருத்துவம் கிடைக்க வேண்டும். கண்பார்வைக் குறைபாட்டை நீக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு தொடங்கப்பட்ட அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனர்களில் ஒருவர் மருத்துவர் நம்பெருமாள்சாமி என்பது குறிப்பிடத்தக்கது.

இலட்சக்கணக்கான மக்களுக்குக் கண்பார்வை அளித்த திரு. நம்பெருமாள்சாமி அவர்களின் சேவைக்கு அங்கீகாரமாக உலகப் புகழ்பெற்ற டைம் இதழ், உலகின் செல்வாக்கு மிகுந்த 100 நபர்களில் ஒருவராகவும் இவரைத் தேர்வு செய்திருந்தது. எளிய நம்பெருமாள்சாமி அவர்களிடம் பயின்ற நூற்றுக்கணக்கான மாணவர்களும் மருத்துவர்களாகி அவரது வழியில், ஏழை மக்களுக்குக் கண் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்ற வகையில் இத்துறையில் அவர் புரிந்துள்ள சாதனை காலத்தால் அழியாதது.

பல இலட்சம் பேருக்கு பார்வையளித்த மருத்துவர் நம்பெருமாள்சாமி அவர்களின் மறைவு பேரிழப்பாகும். மருத்துவத்துறைக்கும் மதுரை மக்களுக்கும் அன்னாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினர். மருத்துவத்துறை நண்பர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

சிறந்த மருத்துவர் விருது:

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ”மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக் குழுமத்தின் முன்னாள் தலைவர் மருத்துவர். நம்பெருமாள் சாமி அவர்கள் காலமானார் என்ற செய்திகேட்டு மிகுந்த துயருற்றேன்.

ஏழை எளிய மக்களுக்கு கண் மருத்துவ சிகிச்சையை சாத்தியப்படுத்தியதில் பெரும் பங்கு வகித்த டாக்டர். நம்பெருமாள் சாமி, இந்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான "பத்மஸ்ரீ" உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். அவருடைய ஒப்பற்ற சேவைக்காக அஇஅதிமுக அரசு, "சிறந்த மருத்துவர்" விருது அளித்தும் நினைவுகூரத்தக்கதாகும்.

அடித்தட்டு மக்களுக்குக் கண் பார்வை அளித்து பெரும் சேவையாற்றிய டாக்டர். நம்பெருமாள் சாமி அவர்களை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், மருத்துவத் துறையைச் சார்ந்தோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

சு.வெங்கடசன் எம்பி தனது இரங்கல் குறிப்பில் "நம்பெருமாள்சாமி அவர்களின் தலைமையில், அரவிந்த் கண் மருத்துவமனை, 2010 ஆம் ஆண்டுக்கான கான்ராட் என். ஹில்டன் மனிதாபிமான பரிசைப் பெற்றது .இது மனித துன்பத்தைப் போக்க அசாதாரணமான பணிகளைச் செய்யும் நற்செயலுக்கு வழங்கப்படும் பெருமைக்குரிய விருது. மருத்துவத்துறையின் அடிப்படையாக சேவை குணம் இருக்க வேண்டும் என்பதில் எப்பொழுது கவனம் கொண்டிருப்பவர். இவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்திற்கும் அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்திற்கும் என் ஆழ்ந்த இரங்கல்" என தெரிவித்துள்ளார்.