தமிழ்நாடு

கரை ஒதுங்கிய அமெரிக்க ராக்கெட் லாஞ்சர்.. நாகை அருகே பரபரப்பு!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு அருகே உள்ள கடற்கரையில் இன்று காலை மர்மப்பொருள் ஒன்று கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரை ஒதுங்கிய அமெரிக்க ராக்கெட் லாஞ்சர்.. நாகை அருகே பரபரப்பு!
American rocket launcher washed ashore
நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு அருகே உள்ள கடற்கரையில் இன்று காலை மர்மப்பொருள் ஒன்று கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலில் மிதந்து வந்த அந்தப் பொருள், அமெரிக்கத் தயாரிப்பான செயலிழந்த ராக்கெட் லாஞ்சர் என்று கண்டறியப்பட்டுள்ளது.

வேளாங்கண்ணி கடற்கரையில் மர்மப் பொருள்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரம் கடற்கரையில் இன்று காலை மர்மப்பொருள் ஒன்று கரை ஒதுங்கிக் கிடப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள், சந்தேகமடைந்து உடனடியாக வேளாங்கண்ணி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில், வேளாங்கண்ணி டி.எஸ்.பி. நிக்ஸன் தலைமையிலான போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் பிரதாபராமபுரம் கடற்கரைக்கு விரைந்தனர். கடற்கரை ஓரம் கிடந்த அந்த நான்கு அடி நீளமுள்ள மர்மப் பொருளை அவர்கள் கைப்பற்றிச் சோதனை மேற்கொண்டனர்.

அமெரிக்க ராக்கெட் லாஞ்சர் என உறுதி

சோதனையில், இரண்டு பைப் இணைப்புகளுடன் கடலில் மிதந்து வந்து கரை ஒதுங்கிய அந்த மர்மப் பொருளானது, வெடிமருந்து இன்றி செயலிழந்த ராக்கெட் லாஞ்சர் என்பது தெரியவந்தது. மேலும், அதில் 'மேட் இன் யு.எஸ்.ஏ.' (Made in USA) என்று முத்திரை பதிக்கப்பட்டு இருந்ததும் உறுதி செய்யப்பட்டது.

வெடிகுண்டு நிபுணர்கள், ராக்கெட் லாஞ்சரின் உள்ளே ஏதேனும் வெடிமருந்துகள் உள்ளதா எனத் தீவிர சோதனை நடத்தினர்.

எஸ்.பி. அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது

செயலிழந்த நிலையில் கடலில் மிதந்து கரை ஒதுங்கி இருந்த அமெரிக்க ராக்கெட் லாஞ்சரைக் கைப்பற்றிய போலீசார், மேலதிக ஆய்வுகளுக்காக அதை நாகப்பட்டினம் எஸ்.பி. அலுவலகத்திற்குக் கொண்டு சென்றனர். அமெரிக்கத் தயாரிப்பு ராக்கெட் லாஞ்சர் வேளாங்கண்ணி அருகே கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நாகை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.