தமிழ்நாடு

மகன் மீது பொய் வழக்கு- டிஜிபி அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தீக்குளிக்க முயற்சி; பரபரப்பு!

திருவல்லிக்கேணி போலீஸ் தனது மகன் மீது பொய் வழக்குப் பதிவு செய்ததாகக் குற்றம்சாட்டி, சென்னை டிஜிபி அலுவலகம் முன் ராணி, மணி மற்றும் மணிமாறன் ஆகிய மூவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மகன் மீது பொய் வழக்கு- டிஜிபி அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தீக்குளிக்க முயற்சி; பரபரப்பு!
டிஜிபி அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தீக்குளிக்க முயற்சி
சென்னை: சென்னை திருவல்லிக்கேணி, எஸ்.எம். நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி, அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் டிஜிபி அலுவலக வாசலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவத்தின் பின்னணி:

எஸ்.எம். நகர் பகுதியைச் சேர்ந்த மதியழகன் என்பவர், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் பிணையில் வெளியே வந்த மதியழகனை, திருவல்லிக்கேணி போலீசார் போதைப் பொருள் கடத்தியதாகக் கூறி மீண்டும் கைது செய்துள்ளனர்.

குடும்பத்தினரின் போராட்டம்:

இதையடுத்து, தனது மகனைப் போலீசார் வேண்டுமென்றே பொய் வழக்கில் கைது செய்ததாகக் கூறி, மதியழகனின் பெற்றோரான ராணி - மணி மற்றும் மற்றொரு மகன் மணிமாறன் ஆகிய மூவரும் இன்று (அக். 1, 2025) மதியம் சென்னை டிஜிபி அலுவலக வாசலுக்கு வந்தனர். அங்கு, நீதி கேட்டுத் தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துத் தற்கொலைக்கு முயன்றனர்.

இதைப் பார்த்த பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் உடனடியாக அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி, பத்திரமாகக் காப்பாற்றினர். இதனையடுத்து, அந்த மூவரும் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தற்போது அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். காவல்துறை அலுவலகம் முன்பே நடந்த இந்தத் துணிச்சலான சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.