தமிழ்நாடு

Ajithkumar Birthday: 54-வது பிறந்தநாளை கொண்டாடும் அஜித்.. ரசிகர்கள் வாழ்த்து!

நடிகர் அஜித்குமார் இன்று தன்னுடைய 54-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். மே 1 தொழிலாளர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டாலும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அஜித் பிறந்தநாள் தான் கொண்டாட்டம் என்று சொன்னால் அது மிகையாகாது. சினிமா மட்டுமில்லாது தான் கால்பதிக்கும் அனைத்திலும் தனக்கென தனி முத்திரை பதித்து வரலாறு படைத்து வருகிறார் அஜித்குமார்.

Ajithkumar Birthday: 54-வது பிறந்தநாளை கொண்டாடும் அஜித்.. ரசிகர்கள் வாழ்த்து!
தமிழ் சினிமாவில் 32 ஆண்டு காலமாக உச்ச நடிகராகவும், அல்டிமேட் ஸ்டாராக வலம் வரும் அஜித்குமார், தன்னுடைய நடிப்பின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார். அஜித்தின் ரசிகர்களும் அவரை கொண்டாடி வருகின்றனர். வெற்றியோ, தோல்வியோ ரசிகர்கள் என்றுமே அஜித்தை விட்டுக்கொடுத்ததில்லை என்று தான் சொல்ல வேண்டும். தமிழ் சினிமாவில் அமராவதி திரைப்படம் எண்ட்ரி கொடுத்த அஜித் இன்று கோலிவுட்டில் தவிர்க்க முடியாத காதல் மன்னனாக தொடர்ந்து வலம் வருகிறார்.

அஜித்குமார் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அனோஷ்கா, ஆத்விக் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். கார் ரேஸ், சூட்டிங் இல்லாத நாட்களில் குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வரும் அஜித், திருமண நாள், ஷாலினி பிறந்த நாள், குழந்தைகளின் பிறந்த நாள் என எதையும் மறக்காமல் குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வருகிறார். இதுபோன்ற கொண்டாட்ட புகைப்படங்களை ஷாலினி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டால், சில மணி நேரங்களில் அதனை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி விடுவார்கள். நடிகர் அஜித்குமார் தனது ரசிகர்களுக்கு சத்தமே இல்லாமல் ஏராளமான உதவிகளை செய்து வருகிறார்.

சினிமா தவிர்த்து, கார் ரேசில் ஆர்வம் கொண்ட அஜித்குமார் அதில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். திரைப்பட சூட்டிங்கில் விடுமுறை கிடைத்தால், பைக் ரைட், கார் ரேஸ் என தனியாக கிளம்பிவிடுவார். ஜி.டி. 4 ரக கார் ரேஸ் என்ற பெயரில் வெளிநாடுகளில் கார் ரேசில் இந்தியா சார்பில் பங்கேற்று வருகிறார். அதில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துபாயில் நடைபெற்ற கார் ரேசில் அஜித்குமாரின் அணி 3-வது இடம் பிடித்து முத்திரைப்பதித்தது. அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து கார் ரேசில் பங்கேற்கப்போவதாகவும் கூறிய அஜித்குமார், அவருடைய மகன் ஆத்விக்கையும் கார் ரேசில் பங்கேற்க ஆயத்தப்படுத்தி வருகிறார். எப்போதும் பொதுஇடங்களுக்கு செல்லாத அஜித்குமார், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளை பார்க்க தனது குடும்பத்துடன் வந்திருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எப்போதும், நடிகை ஷாலினி தனது மகனுடன் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க வருவது வழக்கம், ஆனால், அஜித்தின் வருகை ரசிகர்கள் மட்டுமில்லாமல், அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது என்றே சொல்ல வேண்டும். அஜித்தின் ரசிகர்களுக்கு அவரின் திடீர் விசிட் இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. இப்படி அடிக்கடி பொது இடங்களில் அஜித் வருகையை அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்றே சொல்லவேண்டும்.

நாட்டின் மிக உயரிய விருதான பத்ம பூஷன் விருந்து இந்திய அரசால், நடிகர் அஜித்குமாருக்கு, கடந்த 28ஆம் தேதி வழங்கப்பட்டது. டெல்லியில் உள்ள குடியரசுத்
தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அஜித்குமாருக்கு விருதை வழங்கினார். இந்த விழாவில் நடிகர் அஜித்குமார் தன்னுடைய குடும்பத்துடன் கலந்துகொண்ட நிலையில், அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இணையத்தில் கோடிக்கணக்காண ரசிகர்கள் அஜித் விருது பெரும் வீடியோக்களை வைரலாக்கினர்.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் அஜித்குமாருக்கு, நள்ளிரவு 12 மணி முதலே ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம் ரீரிலிஸ் செய்யப்பட உள்ளதையும் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வரும் அஜித் ரசிகர்கள், இணையத்தில் #அஜித்குமார் #AK #ரெட்டிராகன் போன்ற ஹேஷ்டேக்குளை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.