சினிமா ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா, பிரபல நடிகர் மற்றும் சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் மீது சமீபத்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார்.
மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார்
ஜாய் கிரிஸில்டா தனது புகாரில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி, கர்ப்பமாக்கி, பின்னர் கைவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன், சட்டபூர்வமான விவாகரத்து பெறாமல் தன்னைத் திருமணம் செய்ததாகவும், கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியதாகவும், பலமுறை தன்னைத் தாக்கியதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து ஜாய் கிரிஸில்டா யூடியூப் சேனல்களில் அவதூறு கருத்துக்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் மாதம்பட்டி ரங்கராஜின் கேட்டரிங் நிறுவனம், ஜாய் கிரிஸில்டா சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவுகளால் தங்கள் நிறுவனத்தின் நற்பெயருக்குப் பாதிப்பு ஏற்பட்டு ரூ.12 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறியுள்ளனர். இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.
விசாரணைக்கு ஆஜர்
இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என ஜாய் கிரிஸில்டா தெரிவித்துள்ளார். நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது அளித்த புகார் மீதான விசாரணைக்காக ஆயிரம் விளக்கு பகுதியில் அமைந்துள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை ஆணையர் அலுவலகத்தில் ஆஜரானார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “கடந்த 20 நாட்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தேன். அது மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நீதிமன்றத்தை நாடி இருந்தேன்.
தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்
இன்று காலை விசாரணைக்கு அழைத்து இருந்தார்கள். நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளேன். கடந்த இரண்டு வருடங்களாக என்ன நடந்தது என்பது குறித்து விரிவாக கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு முழுமையாக பதில் அளித்துள்ளேன். கல்யாணம் செய்வதாக ஏமாற்றி விட்டார் என செய்திகள் வருகிறது. ஆனால் உண்மை என்னவென்றால் அவரை என்னை திருமணம் செய்து கொண்டார். தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்.
யூடியூப்பில் பேசுபவர்களுக்கு ஒரு பெண் வந்து நின்னுட்டா என்ன வேணாலும் பேசலாம் என்று அர்த்தமில்லை. அவர்களுக்கும் மனம் இருக்கிறது. நிறைய பிரச்சனைகளுடன் பல பெண்கள் இருக்கிறார்கள். வெளியே வராமல் இருக்கிறார்கள். நீங்கள் தப்பாக எழுதுவதால் மட்டுமே அவர்கள் வெளியே வர முடியாமல் முடங்கி இருக்கிறார்கள். மேலும், குழந்தையின் சாபம் உங்களை சும்மா விடாது. விசாரணை திருப்திகரமாக இருந்தது. என் குழந்தைக்கு பாதுகாப்பு இல்லை என்பதை காவல்துறைக்கு தெரிவித்துள்ளேன். ரங்கராஜை அழைத்து விசாரிப்பதாக போலீசார் கூறியுள்ளார்கள்.
வழக்குப்பதிவு செய்வார்கள்
இது மாதம்பட்டி ரங்கராஜனின் குழந்தை. அவர் ஜாலியாக வெளியே சுத்தலாம். ஆனால் நான் நிச்சயம் போராடுவேன். இந்த குழந்தையின் தந்தை அவர் தான். எழுத்துப்பூர்வமாக அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிச்சயம் அவர் மீது வழக்குப்பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கிறேன்” என தெரிவித்தார்.