தமிழ்நாடு

அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்–பாஜக சார்பில் போலீசில் புகார்

பொன்முடி மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

 அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்–பாஜக சார்பில் போலீசில் புகார்
அமைச்சர் பொன்முடி மீது புகார்

சைவ, வைணவ மதத்தினரை இழிவாக பேசியதாக அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழக பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கொடுத்துள்ள புகார் கடிதத்தில், “பொன்முடி என்ற நபர் தமிழக அமைச்சராகவும், திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் உள்ளார். இவர் ஒரு மேடையில் பேசியுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.அதில் மேற்கண்ட பொன்முடி என்கிற நபர், கீழ்க்கண்டவாறு பேசியுள்ளார்.

நான் கல்லூரி பேராசிரியராக இருந்தபோது, நாங்கள் திராவிட கூட்டங்களில் அடல்ஸ் ஒன்லி பட்டிமன்றங்களை நடத்துவோம். அதில் ஓரிடத்தில் சொல்லுவோம். விலைமாதர் வீட்டிற்கு ஒருத்தன் போறான். அப்போது அந்த விலைமாது, சைவமா வைணவமா என்று கேட்டாராம். அதற்கு அந்த நபர் என்னடா இது விலை என்ன, பத்து குடு ஐஞ்சு குடு என்று கேட்டால் பரவாயில்லை. சைவமா வைணவமா என்று கேட்கிறார்களோ அப்படி என்றால் என்ன என்று கேட்டாராம். அதற்கு அந்த விலைமாது சைவம் என்றால் படுத்துகறது. வைணவம் என்றால் நின்னுகிறது. (இதை குறிப்பிடும் பொழுது பட்டை அணிதல் திருநாமம் அணிதல் உள்ளிட்ட இந்து தர்ம குறியீடுகளை செய்கையாக செய்து காட்டுகிறார்). நின்னுகிட்டா ஐஞ்சு, படுத்திக்கிட்டா பத்து என்று சொன்னுச்சாம். இதெல்லாம் நாங்கள் அந்த அடல்ட்ஸ் ஒன்லி பட்டிமன்றத்தில் பேசி பேசி, இந்த திராவிட இயக்கத்தினுடைய கொள்கைகளை பரப்புவதற்காக எடுத்துகொண்ட நடவடிக்கைகள்" என்று பேசியுள்ளார்.

மாண்பை குலைக்கும் விதத்தில் பேச்சு

மேற்கண்ட நபர், வேண்டுமென்றே ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தும் நோக்கத்திலும் இரு பிரிவுகளுக்கு இடையே பகைமையை தூண்டும் வகையிலும் அதன் மூலம் பொது அமைதியை கெடுக்கும் வகையிலும் ஒரு மதத்தினரின் மனதை புண்படுத்தும் வகையிலும், அவ்வாறு புண்படுத்தி அதன்மூலம் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் நம்பிக்கைகளை அவமானப்படுத்தி அதன் மூலமாக வேண்டுமென்றே உணர்வுகளை தூண்டி ஒரு குறிப்பிட்ட பிரிவினரை சினம் ஊக்கமூட்டும் நோக்கத்திலும் பொது அமைதியை குலைக்கும் வகையிலும், கொச்சையான காட்சிப்படுத்தல் மூலம் வேண்டுமென்றே மத ரீதியான எண்ணங்களை, நம்பிக்கைகளை அவமானப் படுத்தும் நோக்கத்தில் வெளியிடும் வகையிலும் வேண்டுமென்றே அவமானப்படுத்தும் வகையில் வசனங்களை காட்சிப்படுத்தி குறிப்பிட்ட மதத்தினரை அவமானப்படுத்தி அதன்மூலம் அவர்களைத் தூண்டி பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் உண்மைக்கு புறம்பான அடிப்படையற்ற பொய்யான வதந்திகளை மக்களிடையே பரப்பி, அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தூண்டி, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் வகையிலும் பெண்களின் மாண்பை குலைக்கும் விதத்திலும் பேசியுள்ளார்.

எனவே பொன்முடி மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். முன்னதாக பொன்முடியின் பேச்சுக்கு கனிமொழி எம்.பி., நடிகை குஷ்பு, பாடகி சின்மயி உள்ளிட்டோர் எதிர்த்து தெரிவித்திருந்தனர்.

நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பொன்முடியின் சர்ச்சை பேச்சை தொடர்ந்து அவர் திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக திருச்சி சிவா எம்.பி நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் பொன்முடியின் அமைச்சர் பதவியையும் பறிக்க வேண்டும் என முதலமைச்சருக்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர்.இதைத்தொடர்ந்து சமீபத்தில் தான் பேசிய பேச்சிற்கு மன்னிப்பு கோரினார் அமைச்சர் பொன்முடி, இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது எனவும் உறுதி அளித்தார். இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.