மகன் எரித்து கொலை
திருச்சி மாவட்டம், முசிறி அருகே வேலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு கோபிநாத் (26) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. மகள் கெளசி சென்னையில் படித்து வருகிறார். கோபிநாத் டிப்ளமோ படித்து விட்டு தோட்டத்தில் விவசாய வேலை செய்து வந்துள்ளார்.
பாலசுப்ரமணியம் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் செல்வியும், கோபிநாத்தும் தோட்டத்தில் உள்ள குடிசை வீட்டில் தங்கி விவசாயம் பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் மகன் கோபிநாத் வேலம்பட்டி கிராமத்தில் வயலில் உள்ள வீட்டின் முன்பு வாசலில் நேற்று இரவு படுத்து உறங்கி உள்ளார். இந்நிலையில் இன்று காலை எரிந்த நிலையில் இருந்த கோபிநாத்தை பார்த்ததாகவும், இதுகுறித்து அவரது தாயார் செல்வி காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார்.
தாய் கைது
சம்பவ இடத்திற்கு முசிறி போலீஸ் டிஎஸ்பி சுரேஷ்குமார் தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சடலத்தை கைப்பற்றி கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.இந்த விசாரணையில் இவர்களுக்கு சொந்தமான வீடு நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தாலுகா, அம்பாயிபாளையம் கிராமத்தில் உள்ளது. இந்த வீட்டினை விற்பதற்காக ஒன்பது லட்சம் ரூபாய் பணத்தை முன் தொகையாக கோபிநாத் வாங்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து கோபிநாத்தின் தாயார் செல்வியை அழைத்து போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை செய்தனர்.
இந்த விசாரணையில் வீடு விற்பதற்காக முன் தொகையாக பெற்ற பணத்தை கோபிநாத் மது அருந்தியும், தேவையில்லாத செலவுகளை செய்தும் பணத்தை செலவழித்ததால் நேற்று இரவு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கோபிநாத்தின் தாயார் செல்வி கோடாலியால் அவரை கழுத்தில் தாக்கியுள்ளார். பிறகு வீட்டில் இருந்த மண்ணெண்ணையை ஊற்றி தனது மகனை எரித்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.செல்வியை கைது செய்த தாத்தையங்கார் பேட்டை போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சொந்த மகனை தாயே மண்ணெண்ணையை ஊற்றி கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.