தமிழ்நாடு

நெல்லையில் பயங்கரம்: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல்.. நடந்தது என்ன?

சாதிய பாகுபாடு காரணமாக சக மாணவர்களால் தாக்கப்பட்ட சின்னத்துரை மீது 5 பேர் கொண்ட கும்பல் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையில் பயங்கரம்: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல்.. நடந்தது என்ன?
நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல்.. நடந்தது என்ன?
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேந்த சின்னத்துரை என்ற மாணவன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சக மாணவர்களால் சாதிய பாகுபாடு காரணமாக வீடு புகுந்து தாக்கப்பட்டார். இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று உடல் நலம் தேறிய நிலையில் தற்போது ரெட்டியார்பட்டி பகுதியில் வசித்து வருகிறார்.

மாணவன் சின்னத்துரை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களை பார்க்க செல்வதாக தாயாரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். அப்போது திருநெல்வேலி கொக்கிரகுளம் அறிவியல் மையம் அருகே உள்ள பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் சின்னதுரையை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் கை, தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு சின்னதுரை அங்கேயே விழுந்துள்ளார்.

அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சின்னத்துரையை அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக மாநகர காவல்துறை துணை ஆணையாளர் வினோத் சந்தானம் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.

பாதிக்கப்பட்ட சின்னத்துரையிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இன்ஸ்டாகிராம் மூலம் நண்பர்களாக பழகிய சிலர் திருமண அழைப்பிதழ் வைப்பதற்காக அழைத்ததாகவும் அதன் பேரில் கொக்கிரகுளம் அறிவியல் மையம் அருகே உள்ள வசந்த நகர் பகுதிக்கு சென்றபோது அடையாளம் தெரியாத நான்கு பேர் தன்னை தாக்கி பணம் கேட்டதாகவும் பணம் இல்லாததால் அங்கிருந்த கட்டை உள்ளிட்டவைகளால் அடித்து காயம் ஏற்படுத்தி விட்டு தனது அலைபேசியையும் பறித்து சென்றதாக தெரிவித்துள்ளார்.

போலீசார் இன்ஸ்டாகிராம் தொடர்பான விசாரணையை மேற்கொள்வதற்கு கடவுச்சொல் உள்ளிட்டவைகளை கேட்டபோது கணக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் மறந்துவிட்டதாக கூறியுள்ளார். இந்த நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கினை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து போலீசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் கடவுச்சொல் உள்ளிட்டவைகளை தருவதற்கு சின்னத்துரை மறுத்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சின்னத்துரை தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். ஏற்கனவே மாணவன் சின்னத்துரை தாக்கப்பட்ட நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.