தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த முனீஸ்வரன் மதுரை மாநகர் பீ.பீ.சாவடி மின்வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்துவருகிறார். மதுரை காளவாசல் பகுதியில் வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்துவருகிறார். இந்நிலையில் நேற்று மதுரை கோச்சடை முத்துமாரியம்மன் கோவில் அருகே மின் கம்பத்தில் ஏற்பட்ட பழுது தொடர்பான புகாரின் கீழ் சரிசெய்வதற்காக மின்கம்பத்தில் ஏறி நின்றபடி பணி செய்துகொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தொடர்ந்து, அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை இணைப்பை துண்டித்து அவரது உடலை மீட்டனர். இதனையடுத்து அவரது உடலானது உடற்கூராய்விற்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக எஸ்.எஸ்.காலனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து, இதுபோன்று பணிநேரங்களில் மின்வாரிய ஊழியர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பது தொடர்கதையாகி வரும் நிலையில், அரசு ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவேண்டும் என்றும், உயிரிழந்த மின்வாரிய குடும்பத்தினரின் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.