விளையாட்டு

பும்ரா ரிட்டன்.. டிங் டாங் பெல் அடித்த சச்சின்: தொடங்கியது லார்ட்ஸ் டெஸ்ட்!

லார்ட்ஸ் மைதானத்தில் இன்று (ஜூலை 10, 2025) இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்துள்ளது.

பும்ரா ரிட்டன்.. டிங் டாங் பெல் அடித்த சச்சின்: தொடங்கியது லார்ட்ஸ் டெஸ்ட்!
Sachin Tendulkar rings the bell at Lords to start the test match between india and england
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்-டெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும், 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றிபெற்ற நிலையில், தொடரானது 1-1 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் உள்ளன. இந்நிலையில் இந்தியா, இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், “ லார்ட்ஸ் ஆடுகளம் முதல் ஒரு மணி நேரத்திற்கு பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் முதலில் பேட் செய்ய முடிவு செய்துள்ளோம். தொடர் சிறப்பாக செல்கிறது, இந்த போட்டிக்கு எங்களது அணி முழுவீச்சில் தயாராக இருப்பதாகவும்’குறிப்பிட்டார். இங்கிலாந்து அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய டாங்-க்கு பதிலாக ஜோஃப்ரா ஆர்ச்சர் இன்றைய போட்டியில் களமிறங்குகிறார். பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது அந்த அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. 2021-ஆம் ஆண்டு பிப்ரவரிக்கு பிறகு காயம் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் களத்திற்கு திரும்பியுள்ளதால் இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.

இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பேசுகையில், டாஸ் வென்றால் முதலில் பந்துவீசவே விரும்பியிருப்பேன் என்று தெரிவித்தார். முதல் செஷனில் பந்துவீச்சாளர்களுக்கு ஏதேனும் விக்கெட் எடுக்க வாய்ப்பு இருக்கும் என கூறினார். ”கடந்த எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்துவீசி 20 விக்கெட்டுகளை வீழ்த்தினோம். உண்மையில் அந்த பிட்ச் பவுலர்களுக்கு சாதகமானதாக இல்லை, இருந்தாலும் நம்பிக்கையுடன் செயல்பட்டு போட்டியில் வென்றோம்” என குறிப்பிட்டார் சுப்மன் கில். இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2-வது டெஸ்ட் போட்டியில் ஓய்வு வழங்கப்பட்ட ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.

ஆடும் பிளேயிங் 11:

இந்தியா (விளையாடும் XI): யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், கருண் நாயர், ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

இங்கிலாந்து (விளையாடும் XI): சாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஷோயப் பஷீர்.