விளையாட்டு

Rishabh Pant: 6 வாரங்களுக்கு ஓய்வு? வெளியேறும் பந்த்.. இஷானுக்கு ஒரு வாய்ப்பு!

ரிஷப் பந்த் காலில் ஏற்பட்ட காயத்தால் 6 வாரங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில், தற்போது நடைப்பெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மீண்டும் பேட்டிங் செய்ய களத்திற்கு வரமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Rishabh Pant: 6 வாரங்களுக்கு ஓய்வு? வெளியேறும் பந்த்.. இஷானுக்கு ஒரு வாய்ப்பு!
Pant's Injury Opens Door for Ishan Kishan in India's Test Squad
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 4-வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டரிலுள்ள ஓல்ட் டிராஃபோர்டில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சினை தேர்வு செய்த நிலையில் இந்திய அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இந்திய அணிக்கு பின்னடைவு:

ஆட்டத்தின் ஒரு கட்டத்தில், பந்த் 37 ரன்களில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, வோக்ஸின் பந்துவீச்சில் ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்றார். ஆனால், பந்து அவரது காலை பதம் பார்த்தது. இங்கிலாந்து அணி வீரர்கள் எல்பிடபிள்யூ அப்பீல் செய்தனர், நடுவர் அவுட் வழங்காததால் அதைத் தொடர்ந்து டிஆர்எஸ் மேல் முறையீடு செய்தனர். அதில் அவுட் இல்லை என்பது தெரிய வந்தது. இருப்பினும், காலில் ஏற்பட்ட காயத்தால் வலியில் துடித்தார் ரிஷப் பந்த்.

இந்திய அணிக்கான பிசியோ மைதானத்திற்குள் வந்து ரிஷப் பந்தினை பரிசோதித்த போது, நிலைமை மோசமாக இருப்பதை உணர்ந்தார்கள். உடனடியாக மைதானத்திற்குள் கோல்ப் வாகனம் வரவழைக்கப்பட்டு மைதானத்திற்கு வெளியே ரிஷப் பந்த் அழைத்துச் செல்லப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனை விரைந்தார். ஸ்கேன் செய்து பார்த்ததில், ரிஷப் பந்தின் கால் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மருத்துவர்கள் குறைந்தது 6 வாரங்கள் வரை ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள நிலையில், ரிஷப் பந்த் மீண்டும் பேட்டிங் செய்ய வரமாட்டார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

ரிஷப் பந்திற்கு பதிலாக துருவ் ஜூரல் விக்கெட் கீப்பிங் செய்வார் என்றாலும், இந்திய அணிக்கு இரண்டாவது இன்னிங்ஸில் 10 வீரர்கள் மட்டுமே பேட்டிங் செய்யமுடியும் என்கிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கெதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்திற்கு மாற்றாக அணியில் இஷான் கிசான் சேர்க்கப்படலாம் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.

டெஸ்ட் அணியில் இஷான் கிசான்:

இஷான் கடைசியாக 2023 நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியாவுக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவமும் இஷான் கிஷானுக்கு உள்ளது.

சமீபத்தில் நடைப்பெற்ற கவுண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் இஷான் கிஷான் சிறப்பாக செயல்பாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.