விளையாட்டு

ஒத்த ஆளாக போராடிய ஜட்டு.. கண்ணீர் சிந்திய சிராஜ்: சாதித்தது இங்கிலாந்து அணி!

லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெற்ற இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில், 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.

ஒத்த ஆளாக போராடிய ஜட்டு.. கண்ணீர் சிந்திய சிராஜ்: சாதித்தது இங்கிலாந்து அணி!
Jadeja's Lone Battle Not Enough as India Falls Short in Lord's Test
இந்தியா- இங்கிலாந்து இடையே நடைப்பெற்று வரும் 3 வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற 193 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து அணி. லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 10 ஆம் தேதி தொடங்கிய இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது.

சம பலத்தில் முடிந்த முதல் இன்னிங்ஸ்:

வழக்கமான தனது “பேஸ்பால்” ஆட்டத்தை இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தில் கைவிட்டு இருந்தது பலருக்கும் வியப்பை தந்தது. இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் முதல் இன்னிங்ஸில் சதம் விளாசி அசத்தினார். ஜேமி ஸ்மித், கார்ஸ் போன்றோர் அரைச்சதம் விளாசிய நிலையில் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 387 ரன்களை எடுத்தது இங்கிலாந்து அணி.

இதன்பின் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் ராகுல் சதம் விளாசி இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தார். பந்த், ரவீந்திர ஜடேஜா தங்கள் பங்குக்கு ரன்களை குவிக்க இந்திய அணியும் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 387 ரன்கள் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே தடுமாறியது. சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்தது. இந்த மைதானத்தில் பெரிதாக ஸ்பின் எடுபடாத நிலையில், வாஷிங்டன் சுழலில் மாயவித்தை காட்டினார்.

முதல் இன்னிங்ஸில் சதமடித்த ஜோ ரூட், கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஸ்மித், ஆகியோரை தனது சுழலில் வீழ்த்தினார். பெரிதாக பார்ட்னர்ஷிப் அமையாத நிலையில், இங்கிலாந்து அணி 192 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்:

193 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். கருண் நாயர் 14 ரன்களிலும், சுப்மன் கில் 6 ரன்களிலும் அவுட்டாக நைட்வாட்ச்மேன்னாக களமிறங்கிய அக்‌ஷய் தீப் 1 ரன்களிலும் அவுட்டாக இந்திய அணி ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர். 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்களை இந்திய அணி இழந்தது.

இறுதி நாளான இன்று பந்த்- ராகுல் இணை வெற்றி பாதையினை நோக்கி இந்திய அணியினை அழைத்துச் செல்லும் என எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பந்த் 9 ரன்களில் க்ளீன் போல்டாகி வெளியேற, ராகுலும் 39 ரன்களில் அவுட்டாகினார். ஒருக்கட்டத்தில் இந்திய அணி 82 ரன்னுக்கு 7 விக்கெட்களை இழந்து தோல்வியின் விளிம்பில் தொங்கி கொண்டு இருந்தது.

ஜடேஜா மட்டும் தன் பொறுப்பினை உணர்ந்து களத்தில் திறமையாக விளையாண்டார். மறுமுனையில் நித்திஷ் குமார், பும்ரா, சிராஜ் முடிந்தளவுக்கு ஜடேஜாவுக்கு பக்க பலமாக களத்தில் இருந்த போதிலும், 170 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டாகியது. இறுதிவரை அவுட்டாகமல் ஜடேஜா 61 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

22 ரன்கள் வித்தியாசத்தில் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியினை வென்ற இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.