விளையாட்டு

41 வயதில் காலமான ஐசிசி நடுவர்.. அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்

ஐசிசி சர்வதேச போட்டிகளில் நடுவராக செயல்பட்டு வந்த பிஸ்மில்லா ஜான் ஷின்வாரி கடந்த திங்கள்கிழமை இரவு காலமானார். இதனைத் தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்கள், வீரர்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

41 வயதில் காலமான ஐசிசி நடுவர்.. அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்
International Umpire Bismillah Jan Shinwari Passes Away at 41
கிரிக்கெட் போட்டிகளில் வீரர்களை தாண்டி, களத்தில் திறம்பட முடிவுகளை வழங்குவதன் மூலம் நடுவர்களும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டினை பெறுவார்கள். அந்த வகையில், சிறப்பாக நடுவர் பணியினை கையாண்டு வந்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஐசிசி சர்வதேச நடுவர்கள் குழுவின் உறுப்பினரான பிஸ்மில்லா ஜான் ஷின்வாரி தனது 41-வது வயதில் காலமானார்.

சர்வதேச போட்டிகளை பொறுத்தவரை, டிசம்பர் 2017 ஆம் ஆண்டு ஷார்ஜாவில் நடைப்பெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டியில், ஐசிசி நடுவராக அறிமுகமாகினார் பிஸ்மில்லா. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பிஸ்மில்லா ஜான் ஷின்வாரி இதுவரை 25 சர்வதேச ஒருநாள் போட்டிகள், 21 சர்வதேச டி20 போட்டிகள், 31 முதல் தர போட்டிகள், 51 லிஸ்ட் ஏ போட்டிகள் மற்றும் 96 உள்நாட்டு டி20 போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார்.

41 வயதில் காலமான ஷின்வாரியின் இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை நங்கர்ஹார் மாகாணத்தின் அச்சின் மாவட்டத்தில் நடைபெற்றது. உயிரிழந்த பிஸ்மில்லா ஜான் ஷின்வாரிக்கு ஐந்து மகன்கள் மற்றும் ஏழு மகள்கள் உள்ளனர் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.

உயிரிழப்புக்கான காரணம் குறித்து பிஸ்மில்லாவின் சகோதரர் கூறுகையில், “வயிற்றுக் கொழுப்பை அகற்ற அறுவைச்சிகிச்சை மேற்கொள்வதற்காக பெஷாவர் சென்றார். சில நாட்களாக மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டிருந்தார். அறுவை சிகிச்சைக்கு பிறகு எதிர்பாராதவிதமாக அவர் அன்று மாலை உயிரிழந்துவிட்டார்” என தெரிவித்துள்ளார்.



ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது சமூக வலைதள பக்கத்தில், “மறைந்த பிஸ்மில்லா ஜான் ஷின்வாரியின் குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோருக்கு இந்த தருணத்தில் எங்களது இரங்கலையும், ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த கடினமான நேரத்தில் அவரை இழந்து வாடும் அன்புக்குரியவர்களுக்கு மனபலத்தை அளிக்க இறைவனை பிரார்த்திகிறோம்” என பதிவிட்டுள்ளது.

ஐசிசி சேர்மன் ஜெய்ஷா, ஆப்கானிஸ்தான் அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.