விளையாட்டு

IND vs AUS: ரோகித் சர்மா அதிரடி சதம்.. இந்திய அணி ஆறுதல் வெற்றி!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

IND vs AUS: ரோகித் சர்மா அதிரடி சதம்.. இந்திய அணி ஆறுதல் வெற்றி!
IND vs AUS
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் இரு ஆட்டங்களில் தோல்வியடைந்து தொடரை இழந்த நிலையில், சிட்னியில் இன்று நடந்த 3வது மற்றும் கடைசிப் போட்டியில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.|

ஆஸ்திரேலியாவின் பேட்டிங்

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, இந்தியப் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 46.4 ஓவர்களில் 236 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ரென்ஷா 56 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் இளம் வீரர் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இந்தியாவின் மிரட்டல் பேட்டிங்

பின்னர் 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்கம் கொடுத்த சுப்மன் கில் - ரோகித் சர்மா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்தது. கில் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதைத் தொடர்ந்து, கடந்த இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆன விராட் கோலி களமிறங்கி ரோகித் சர்மாவுடன் கைகோர்த்தார். ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் எளிதாக அரைசதம் கடந்தனர். தொடர்ந்து அதிரடியைக் காட்டிய ரோகித் சர்மா சதம் அடித்து மிரட்டினார்.

தொடரின் முடிவு

ரோகித் (121 ரன்கள்) மற்றும் விராட் கோலி (74 ரன்கள்) ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால், இந்திய அணி வெறும் 38.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து, இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வருகிற 29-ஆம் தேதி தொடங்க உள்ளது.