விளையாட்டு

ரோகித்தின் சாதனையைத் தொடரும் கில்: ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக 18 டாஸ் தோல்வி!

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா தொடர்ந்து 18 போட்டிகளில் டாஸ் தோற்று புதிய மோசமான சாதனையைப் பதிவு செய்துள்ளது.

ரோகித்தின் சாதனையைத் தொடரும் கில்: ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக 18 டாஸ் தோல்வி!
18 consecutive tosses lost in ODIs
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், கேப்டன் சுப்மன் கில் டாஸை இழந்ததன் மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா தொடர்ந்து 18 போட்டிகளில் டாஸ் தோற்று புதிய மோசமான சாதனையைப் பதிவு செய்துள்ளது.

டாஸ் தோல்வியின் சாதனை வரலாறு

இந்தியாவின் இந்தத் தொடர் டாஸ் தோல்விப் பயணம், 2023 நவம்பர் 19ஆம் தேதி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா டாஸைத் தோற்றபோது தொடங்கியது. இப்போது சுப்மன் கில் தலைமையில் நடந்த மூன்று போட்டிகளிலும் டாஸை இழந்தது இந்த எண்ணிக்கையை 18 ஆக உயர்த்தியுள்ளது.

முன்னதாக, ரோகித் சர்மா கேப்டனாக இருந்துதான் நவம்பர் 2023 முதல் மார்ச் 2025 வரை தொடர்ச்சியாக 15 முறை டாஸைத் தோற்றார். இதன் மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் பிரையன் லாராவின் 12 தொடர் டாஸ் தோல்விச் சாதனையை இது முறியடித்தது.

கில்லின் கருத்து மற்றும் அணியில் மாற்றம்

தொடரை இழந்த நிலையில், இன்றைய போட்டியில் முதலில் பந்துவீச வாய்ப்பு கிடைத்தது குறித்துப் பேசிய கேப்டன் சுப்மன் கில், "நாங்கள் முதலில் பந்துவீசவே விரும்பினோம். அதனால் விரும்பியது கிடைத்தது" என்று தெரிவித்தார்.

இன்றைய போட்டியில், அர்ஷ்தீப் சிங் மற்றும் நிதீஷ் ராணா ஆகியோருக்குப் பதிலாகச் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இன்றைய போட்டி

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்று வருகிறது.