விளையாட்டு

CSK - KKR மோதல்: 2-வது வெற்றியைப் பதிவு செய்யுமா சென்னை?

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

CSK - KKR மோதல்: 2-வது வெற்றியைப் பதிவு செய்யுமா சென்னை?
csk vs kkr
ஐபிஎல் 2026 தொடரில் ஹாட்ரிக் தோல்விகளுக்குப் பிறகு டெல்லி அணியை வீழ்த்தி வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், தனது அடுத்த பலப்பரீட்சைக்குத் தயாராகிவிட்டது.

நடப்பு ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி, முதல் மூன்று போட்டிகளில் வரிசையாகத் தோல்வியடைந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எனினும், கடந்த போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, சேப்பாக்கத்தில் நிலவிய தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. தற்போது 4 போட்டிகளில் 1 வெற்றி, 3 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்றுள்ள சிஎஸ்கே, இன்று (ஏப்ரல் 14) இரவு 7.30 மணிக்குச் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

அதிரடி காட்டும் சிஎஸ்கே பேட்டிங்

கடந்த போட்டியில் சஞ்சு சாம்சன் சதம் விளாசி பார்மிற்குத் திரும்பியது சென்னை அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. அவருடன் ஆயுஷ் மாத்ரே, ஷிவம் துபே, சர்பராஸ் கான் மற்றும் பிரேவிஸ் போன்ற அதிரடி வீரர்கள் பேட்டிங்கில் வலுசேர்க்கின்றனர். ஆல்-ரவுண்டர் ஓவர்டன் மற்றும் பந்துவீச்சாளர் அன்சுல் கம்மோஜ் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர்.

முதல் வெற்றிக்காகப் போராடும் கொல்கத்தா

மறுபுறம், ரகானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறாமல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மும்பை, ஐதராபாத் மற்றும் லக்னோ அணிகளிடம் தோற்ற அந்த அணி, பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால் கிடைத்த 1 புள்ளியுடன் தத்தளிக்கிறது. சுனில் நரைன், ரிங்கு சிங், கேமரூன் கிரீன் போன்ற நட்சத்திர வீரர்கள் இருந்தும் வெற்றிக் கணக்கைத் தொடங்காத அந்த அணி, இன்றைய சென்னையை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற முனைப்பு காட்டும்.