அரசியல்

'உங்க அப்பா பிறந்த ஊரில் அடிப்படை வசதிகூட இல்லை'.. விஜய் விமர்சனம்!

"முதல்வரின் தந்தை பிறந்த ஊரில் அடிப்படை வசதிகூட இல்லை" என்று விஜய் விமர்சித்துள்ளார்.

'உங்க அப்பா பிறந்த ஊரில் அடிப்படை வசதிகூட இல்லை'.. விஜய் விமர்சனம்!
TVK Vijay
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். திருவாரூரில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது பேசிய அவர், "ஆளும் திமுக அரசின் மீது நேரடியாக ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் அதிக கமிஷன் பெறப்படுவதாகவும், முதல்வர் ஸ்டாலினின் சொந்த மாவட்டத்திலேயே அடிப்படை வசதிகள் இல்லை என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

‘திருவாரூர் தேர்’ vs ‘தமிழ்நாடு தேர்’

தனது உரையின் தொடக்கத்தில், திருவாரூரின் அடையாளமான ஆழித் தேரை நினைவு கூர்ந்த விஜய், "ரொம்ப நாளா ஓடாம இருந்த திருவாரூர் தேரை நாங்கதான் ஓட வைத்தோம் என்று மார்தட்டி சொன்னது யாரென்று உங்களுக்கே தெரியும். ஆனால், அவரோட மகன்தற்போதைய முதல்வர், நல்லா ஓட வேண்டிய தமிழ்நாடு என்ற தேரை நாலு பக்கமும் கட்டையை போட்டு ஆடாம அசையாம அப்படியே நிறுத்துவைத்திருக்கிறார்" என்று குற்றம்சாட்டினார்.

‘40க்கு 40’ கமிஷன்

தொடர்ந்து பேசிய அவர், "இந்த மாவட்டத்தில் உள்ள கொள்முதல் மையங்களில் ஒரு மூட்டை நெல்லை ஏற்றி இறக்குவதற்கு 40 கிலோ மூட்டைக்கு 40 ரூபாய் கமிஷன் வாங்குறாங்களாம். அரசாங்கமே ஒரு மூட்டைக்கு 10 ரூபாய் கொடுக்குறாங்க. இந்த 4 ஆண்டுகளில் பல கோடிகளை விவசாயிகளிடம் இருந்து கமிஷன் பெற்றுள்ளார்கள்" என அவர் பேசினார்.

40-க்கு 40 என்பது தேர்தல் முடிவுகளாக இருக்கலாம். ஆனால், டெல்டா விவசாயிகளுக்கு 40-க்கு 40-னா அவங்க வயிற்றில் அடித்து நீங்க பெற்ற கமிஷன். இதற்கு என்ன சொல்ல போகிறீர்கள்?" என அவர் கேள்வி எழுப்பினார்.

அடிப்படை வசதிகள் இல்லை

முதல்வர் ஸ்டாலினின் சொந்த மாவட்டமான திருவாரூர் அடிப்படை வசதிகளில் பின்தங்கியிருப்பதாக விஜய் விமர்சித்தார். "முதல்வர் சார், உங்க அப்பா பிறந்த இந்த திருவாரூர் மாவட்டத்தில் ஒரு அடிப்படை சாலை வசதி கூட சரியா இல்லையே. மேலும், பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவக் கல்லூரிக்குச் சரியான வசதிகள் இல்லை என்றும், கும்பகோணம்-ஜெயங்கொண்டம் ரயில் பாதை திட்டம் 50 ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

த.வெ.க.வின் தேர்தல் முழக்கம்

தனது பேச்சின் முடிவில், மக்கள் சந்திப்பில் தான் எழுப்பும் கேள்விகளுக்கான தீர்வுகள் த.வெ.க.வின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என்றார். "பொய்யான அறிக்கை கொடுக்க மாட்டோம். எது நடைமுறைக்கு சாத்தியமோ, அதை மட்டும்தான் சொல்வோம், அதை மட்டும்தான் செய்வோம்" என உறுதியளித்தார். ஏழ்மை இல்லாத தமிழகம், ஊழல் இல்லாத தமிழகம், குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகம், உண்மையான மக்களாட்சி என்பதே தனது லட்சியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.