அரசியல்

தவெகவில் இணைந்தது ஏன்? செங்கோட்டையன் விளக்கம்!

தமிழகத்தில் மக்கள் ஒரு புதிய மாற்றத்தை எதிர்பார்ப்பதாகவும், திமுக, அதிமுக இரண்டும் ஒன்றுதான் என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் .

தவெகவில் இணைந்தது ஏன்? செங்கோட்டையன் விளக்கம்!
Sengottaiyan
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை நேற்று ராஜினாமா செய்த நிலையில், இன்று (நவம்பர் 27) தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) அதிகாரப்பூர்வமாக இணைந்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் மக்கள் ஒரு புதிய மாற்றத்தை எதிர்பார்ப்பதாகவும், திமுக, அதிமுக இரண்டும் ஒன்றுதான் என்றும் விமர்சித்தார்.

அதிமுக பயணம் குறித்து பேச்சு

செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், "அதிமுகவில் எம்ஜிஆரால் அடையாளம் காட்டப்பட்டவன் நான். 1972-ல் அதிமுக எனும் இயக்கம் தொடங்கியபோது இருந்தவன் நான். ஜெயலலிதா வழியில் பயணத்தை மேற்கொண்டேன், அவரது பாராட்டையும் பெற்றிருக்கிறேன்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நாங்கள் ஆட்சி நடத்தினோம். இப்போது அதிமுக மூன்று கூறுகளாகப் பிரிந்துள்ளது. அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்றுதான் வலியுறுத்தினோம். அது பரிமாறப்பட்டதே தவிர செயல்படுத்தப்படவில்லை.

"அனைவரும் ஒருங்கிணைக்க வேண்டும் என்றுதான் தேவர் ஜெயந்திக்குச் சென்றேன். இரு நாள்களில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டேன். 50 ஆண்டுகளாக இயக்கத்திற்காக ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்த எனக்கு கிடைத்த பரிசுதான் அது. நான் மட்டுமன்றி என்னைச் சார்ந்தவர்களையும் நீக்கினார்கள்" என்றார்.

'திமுக, அதிமுக இரண்டும் ஒன்றுதான்'

தொடர்ந்து பேசிய அவர், "கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்பு தெளிவான முடிவுகளை எடுத்தபிறகுதான் நேற்று ராஜினாமா செய்து இன்று த.வெ.க.வில் இணைத்திருக்கிறேன். திமுக, அதிமுக வேறு வேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான். 3-வதாக ஒரு கட்சி ஆட்சிக்கு வர வேண்டும்.

விஜய் மாபெரும் இயக்கத்தை உருவாக்க வெற்றிப் பயணத்தை தொடங்கியிருக்கிறார். தமிழகத்தில் புதிய மாற்றம் வேண்டும். 'ஏன் இவர்கள் மட்டுமேதான் ஆள வேண்டுமா? புதிதாக ஒருவர் வேண்டும்' என மக்கள் நினைக்கிறார்கள். டெல்லியில் ஆம் ஆத்மி, பஞ்சாபிலும் புதிய கட்சி ஆட்சி ஏற்பட்டது. மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்" என்று அவர் கூறினார்.

விஜய் தலைமையில் புதிய புரட்சி

"2026-ல் மக்களால் வரவேற்கப்படுகிற, மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிற, மக்களால் உருவாக்கப்படுகிற புனித ஆட்சி உருவாவதற்கு விஜய் வெற்றி பெறுவார். தமிழ்நாட்டில் 2026-ல் மக்களால் மாபெரும் புரட்சி உருவாகி அவர் வெற்றியை எட்டுவார்" என்று செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், "திமுக, பாஜக என எந்த மாற்றுக்கட்சியில் இருந்தும் எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை, யாரும் என்னை அணுகவில்லை" என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.