அரசியல்

MS Bhaskar Emotional Speech : மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழாவில் நடிகர் சங்கம் அஞ்சலி

MS Bhaskar Emotional Speech About Vijayakanth : சினிமா நடிகர்களாக இருந்து நாட்டை ஆண்ட எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரிசையில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழக அரசியலில் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து கொடுக்கப்பட்டவர் இதுவரை விஜயகாந்த் ஒருவர் மட்டும்தான்.

MS Bhaskar Emotional Speech : மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழாவில் நடிகர் சங்கம் அஞ்சலி
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழாவில் நடிகர் எம்.எஸ். பாஸ்கர் அஞ்சலி

MS Bhaskar Emotional Speech About Vijayakanth : தி.மு.க. - அ.தி.மு.க. என்று இரு திராவிட கட்சிகள் மட்டுமே வலுவாக இருந்த தமிழகத்தில், விஜயகாந்த் தொடங்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், 2006ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்று மூன்றாவது வலுவான இயக்கமாக கால் ஊன்றியது. தெய்வத்தோடும், மக்களோடும் தான் கூட்டணி என அறிவித்து தனியாகப் போட்டியிட்ட அந்த தேர்தலில், கட்சி நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மட்டுமே விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், தேமுதிக நிறுவனர் மறைந்த விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அவரது நினைவிடத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தனது குடும்பத்தினருடன் சென்று மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் சிலை திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய அவர் பிரேமலதா விஜயகாந்த், இன்று முதல் தேமுதிக தலைமை அலுவலகத்தின் பெயர் கேப்டன் ஆலயம் என அழைக்கப்படும் என்று கூறினார். மேலும், விஜயகாந்த் பிறந்தநாள் தேமுதிக சார்பில் வறுமை ஒழிப்பு தினமாக  கொண்டாட்டம் என்றும் அவர் தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் பிறந்தநாள் விழாவை அவரது ரசிகர்களும் தேமுதிக தொண்டர்களும் பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்திய படி கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் அவரது உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து பூந்தமல்லி அடுத்த வெள்ளவேடு கிராமத்தில் தேமுதிக பிரமுகர் முரளி கிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் சத்திய பிரியா ஆகியோர் தலைமையில் விஜயகாந்த் உருவப்படம் வைத்து பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதில் திரைப்பட காமெடி நடிகர் எம். எஸ்.பாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விஜயகாந்த் படத்திற்கு அஞ்சலி செலுத்தி அவரது படத்தை கிள்ளி முத்தம் கொடுத்துவிட்டு பொதுமக்களுக்கு பட்டு வேட்டி, சேலைகள் மற்றும் அன்னதானம் வழங்கினார். 

மேலும் படிக்க: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. அண்ணா பல்கலைக்கழக 'செமஸ்டர்' தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு!

இதையடுத்து அவர் பேசுகையில், "விஜயகாந்த் 13 ஆண்டுகளாக சினிமாவிலும், எட்டு ஆண்டுகளாக அரசியலிலும் இல்லை. அவர் இறந்த பிறகு மாற்றுத்திறனாளிகள் எங்கிருந்தோ எல்லாம் வந்தார்கள். அவர் நமது உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருப்பார். விஜயகாந்த் இல்லாத முதல் பிறந்தநாள் இது. அனைவரையும் ஆசீர்வதிக்கும் புனிதராக மாறிவிட்டார். எனக்கு நடிகர் சங்கத்தில் உறுப்பினராக கார்டு கேட்டபோது என்னிடத்தில் பணம் இல்லை அவர் பணம் கொடுத்து எனக்கு வாங்கி தந்தார்” என்றார். இதையடுத்து எங்கள் அண்ணன் கையெழுத்து போட்டு கொடுத்த கார்டு என நடிகர் சங்க உறுப்பினர் கார்டை தனது இடுப்பில் இருந்து எடுத்து காண்பித்த எம்.எஸ்.பாஸ்கர், மீண்டும் அந்த கையெழுத்தை வாங்க முடியுமா? என உருக்கமாக பேசினார்.