அரசியல்

விஜய் 'பெருங்காய டப்பா போல் காலி டப்பா' ஆகி விடுவார்- அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்!

“விஜய் இன்னும் இரண்டு மூன்று மாநாடுகளை நடத்தினால், பெருங்காய டப்பா போல் காலி டப்பாவாகி விடுவார்” என்று அமைச்சர் சேகர் பாபு கடுமையாக விமர்சித்துள்ளார்.

விஜய் 'பெருங்காய டப்பா போல் காலி டப்பா' ஆகி விடுவார்- அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்!
Minister Sekar Babu and Vijay
சென்னை பூங்கா நகர் கந்தக்கோட்டம் பகுதியில் உள்ள முத்துக்குமாரசாமி திருக்கோவிலில் இருந்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, அறுபடைவீடுகளுக்கு முதற்கட்ட ஆன்மிகப் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 5 பேருந்துகளில் 4 நாட்கள் பயணமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இதில், 199 பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, திமுக ஆட்சி குறித்தும், பாஜக மற்றும் நடிகர் விஜய் குறித்தும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார்.

‘ஆன்மிகத்திற்கு எதிரானவர்கள்’ என்ற வலையை அறுத்தெறிந்தோம்

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆட்சி, இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் முத்தமிழ் முருகனுக்குப் பெருமை சேர்க்கும் ஆட்சியாகத்திகழ்கிறது. இந்த ஆட்சியில் இதுவரை 3,412 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளதாகவும், இந்த மாத இறுதிக்குள் 3,500-ஐ கடந்து, விரைவில் 4,000 திருக்கோவில்களில் குடமுழுக்கு நடைபெறும்” என்று அவர் கூறினார்.

அய்யப்பன் மாநாட்டில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தது குறித்து பாஜகவின் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “நயினார் நாகேந்திரன் அரண்டு மிரண்டு போய் உள்ளார். இந்த ஆட்சி ஆன்மிகத்திற்கு எதிரான ஆட்சி என்ற வலையை வீச நினைத்தார்கள். ஆனால், அதை அறுத்தெறிந்து, இது ஆன்மிக ஆட்சி என நிரூபித்த பெருமை முதல்வரை சாரும். அந்த நிகழ்வில் முதல்வர் கலந்துகொண்டால் அவர்களின் பிம்பம் தரைமட்டமாக்கப்படும் என்ற பயத்திலே அவர் அறிக்கை விடுகிறார்” என்றார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் தொகுதியை திமுக கைப்பற்றும்” என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.

தவெக தலைவர் விஜய் குறித்த விமர்சனம்

சமீபத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் விஜய் பேசியது குறித்த கேள்விக்கு, “நரியின் சாயம் வெளுத்துப்போச்சு டும் டும் டும், ராஜா வேஷம் கலைந்துபோச்சு டும் டும் டும்’ என்பது போல் அனைத்துத் தரப்பினரின் விமர்சனத்தையும் அவர் தாங்கிச் சென்று கொண்டிருக்கிறார். இன்னும் இரண்டு மூன்று மாநாடுகளை நடத்தினால், பெருங்காய டப்பா போல் காலி டப்பாவாகி விடுவார் என்பது என் கருத்து” என்று கடுமையாக விமர்சித்தார்.

மேலும், முதலமைச்சரை விஜய் பல்வேறு வார்த்தைகள் கொண்டு விமர்சனம் செய்தது பற்றி, “அவரின் உயரம் அவ்வளவுதான். தமிழக முதலமைச்சரின் புகழ்க் கொடி இமயத்தின் உச்சம் அளவிற்குப் பறந்து கொண்டுள்ளது. சிறுபிள்ளைத்தனமாக இப்படிப்பட்ட பேச்சுகளுக்குப் பதில் சொல்லி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. 2026 தேர்தலை நோக்கி சென்று கொண்டுள்ளோம். சிறுபிள்ளைத்தனமாகப் பேசிக்கொண்டிருப்பவர் களத்திற்கு வரட்டும், எங்கள் முதல்வருக்கு 200 இடங்களை வென்று கொடுப்போம்” என்றார்.