அரசியல்

விஜய் மக்கள் சந்திப்பு: நாளை காஞ்சிபுரத்தில் 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி!

தவெக தலைவர் விஜய் காஞ்சிபுரத்தில் நாளை பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்வில் 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் மக்கள் சந்திப்பு: நாளை காஞ்சிபுரத்தில் 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி!
விஜய் மக்கள் சந்திப்பு
கரூர் சம்பவத்திற்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நாளை (நவம்பர் 23) காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் பங்கேற்கிறார். கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், இந்தக் கூட்டத்தில் 2,000 பேருக்கு மட்டுமே QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டுடன் அனுமதி அளிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிவித்துள்ளார்.

பின்னணி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்

கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் நடந்த பிரசாரத்தில் நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, விஜய் பொது நிகழ்வுகளில் பங்கேற்காமல் இருந்தார். தற்போது அவர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், கட்சியில் 'மக்கள் பாதுகாப்பு படை'யை உருவாக்கி, அவர்களுக்குப் பயிற்சியும் அளித்துள்ளார். இந்தக் கூட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மக்கள் பாதுகாப்புப் படையினர் செய்து வருகின்றனர்.

பொதுச்செயலாளர் என். ஆனந்தின் அறிவிப்பு

இந்த நிலையில், விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்வில் 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது;

"தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்து கொள்ளும் உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை (23.11.2025) ஞாயிற்றுக்கிழமை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில், காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க உள்ளரங்கு சந்திப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 2000 பேர் மட்டுமே இந்த உள்ளரங்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. கழகத் தோழர்களும், பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.