அரசியல்

ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் கைது – விஜய் கண்டனம்

ராகுல் காந்தி தலைமையிலான இந்த பேரணியில் திமுக, திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, இடது சாரிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட 25 கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் கைது – விஜய் கண்டனம்
ராகுல் காந்தி கைதுக்கு விஜய் கண்டனம்
வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்தக்கோரியும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்திய தேர்தல் ஆணையம் நோக்கி இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் பிரமாண்ட பேரணி நடத்தினர்.

ராகுல் காந்தி கைது

ராகுல் காந்தி தலைமையிலான இந்த பேரணியில் திமுக, திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, இடது சாரிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட 25 கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து பேரணியாக சென்ற எம்.பி.க்களை தடுத்து நிறுத்து டெல்லி காவல்துறை கைது செய்தது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி, கே.சி வேணுகோபால், அகிலேஷ் யாதவ், கனிமொழி, ஜோதிமணி, திருச்சி சிவா உள்ளிட்ட பலர் கைது செய்து மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

விஜய் கண்டனம்

இந்த நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் கைது செய்யப்பட்டதற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தலை வலியுறுத்தியும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தலைமைத் தேர்தல் ஆணையம் நோக்கி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஊர்வலமாகச் சென்ற நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது.

அரசியலமைப்புச் சட்டம் காக்கப்பட வேண்டும்

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" புத்தக வெளியீட்டு விழாவில் பேசியபோது, “நம் நாடு முழு வளர்ச்சியை அடைய வேண்டும் என்றால் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். அப்படி ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்றால் அரசியலமைப்புச் சட்டம் காக்கப்பட வேண்டும். அதற்கான பொறுப்பும் கடமையும் நம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும்.

ஜனநாயகத்தின் ஆணிவேர் சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தல்” (Free and Fair Election) என்று அப்பொழுதே ஆணித்தரமாகத் தெரிவித்திருந்தோம். அத்தோடு, தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்தோடு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தோம்.

நியாயமான முறையில் தேர்தல்

மேலும், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியானதும், அந்த நடைமுறையானது ஜனநாயக உரிமைகளைக் கேள்விக்குறியாக்கும் என்று, தமிழ்நாட்டில் இருந்து தமிழக வெற்றிக் கழகம்தான் முதன்முதலாகக் குரல் எழுப்பியது.

ஏற்கெனவே நாம் கூறியது போல, அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படும் விதமாக, ஜனநாயகத்தைக் காக்கும் வகையில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் (Free and Fair Election) நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.