அரசியல்

தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் மீதான வழக்கு - நாளை காலை தீர்ப்பு

சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை காலை தீர்ப்பளிக்க உள்ளது.

தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் மீதான வழக்கு - நாளை காலை தீர்ப்பு
அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு

2006 முதல் 2010 வரையிலான திமுக ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.44.59 லட்சம் சொத்து சேர்த்ததாக அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி மற்றும் நண்பர் சண்முகமூா்த்தி ஆகியோா் மீது 2011-ல் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.
 
வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், அமைச்சர் உட்பட அனைவரும் விடுவித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் வகையில் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார்.

அதேபோல, அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.76.40 லட்சம் சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தன. இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி அமைச்சர்கள் தங்கம் தென்னரசு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் மேல் விசாரணை நடத்தி லஞ்ச ஒழிப்புத் துறையினர் தாக்கல் செய்த அறிக்கைகளின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து சிறப்பு நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்திருந்தன.

இந்த உத்தரவுகளை மறுஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். கடந்த மார்ச் மாதம் இந்த வழக்குகளில் இறுதி விசாரணை துவங்கியது. வழக்குகளில் அமைச்சர்கள் தரப்பிலும், லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்ததை அடுத்து, இந்த மூன்று வழக்குகளின் தீர்ப்பை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார். இந்நிலையில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிரான வழக்குகளில் நாளை காலை 10:30 மணிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளிக்க உள்ளார்.