அரசியல்

அவர் திருச்சூர் இல்லையா? MP சுரேஷ் கோபி பதவிக்கு ஆபத்தா?

மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவினை சேர்ந்த சுரேஷ் கோபி, தனது பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவல்களைச் சமர்ப்பித்ததாக திருச்சூர் நகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அவர் திருச்சூர் இல்லையா? MP சுரேஷ் கோபி பதவிக்கு ஆபத்தா?
Thrissur MP Suresh Gopi Faces False Affidavit Allegations
நடைப்பெற்று முடிந்த 18-வது மக்களவைத் தேர்தலில் கேரளா மாநிலம் திருச்சூர் தொகுதியில் பாஜகவின் வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றவர் சுரேஷ் கோபி.

தற்போது பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறையின் மத்திய இணையமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபிக்கு எதிராக கேரள மாநில காங்கிரஸ் மற்றும் சிபிஐ(எம்) கட்சிகள் காவல் துறையில் புகார் அளித்திருப்பது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்ன குற்றச்சாட்டு?

திருச்சூர் மக்களவைத் தொகுதியில் சுரேஷ் கோபி போட்டியிட்ட நிலையில், தவறான பிரமாணப் பத்திரத்தை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்துள்ளார் என்கிற குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் டி.என். பிரதாபன் மற்றும் சிபிஐ(எம்) தலைவர்கள் அளித்த புகாரின்படி, சுரேஷ் கோபி மற்றும் அவரது குடும்பத்தினர் திருவனந்தபுரத்தில் ஏற்கனவே வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.

ஆனால், திருச்சூர் மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக, தவறான உறுதிமொழிப் பத்திரத்தைச் சமர்ப்பித்து, தங்கள் பெயர்களை திருச்சூர் வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளனர். இது வாக்காளர் பதிவு விதிகளுக்கு எதிரானது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மறுவாக்குப்பதிவு நடத்த கோரிக்கை:

திருச்சூர் தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் சிபிஐ(எம்) கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போது பாஜக தலைமையிலான அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக எதிர்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் இந்தியா முழுவதும் “vote chori" என்கிற பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

கேரளாவின் திருச்சூர் மக்களவைத் தொகுதியிலும், தேர்தலுக்கு முன்பாக வாக்காளர் பட்டியலில் சட்டவிரோதமாக ஏராளமான போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மற்றும் சிபிஐ(எம்) சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

தவறான தகவல்களை அளித்தது தேர்தல் விதிகளை மீறிய செயல் என்பதால், சுரேஷ் கோபி மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று இரு கட்சிகளும் கோரியுள்ளன.

பா.ஜ.க தரப்பினர் மறுப்பு:

எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை பா.ஜ.க. முற்றிலுமாக மறுத்துள்ளது. வாக்காளர் பட்டியல் தயாரிப்பின் போது எந்தப் புகாரும் எழாத நிலையில், தற்போது தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இந்த விவகாரம் எழுப்பப்படுவதாக பா.ஜ.க. தெரிவித்துள்ளது. மேலும், வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்ட போது சிபிஐ(எம்) தான் கேரளாவில் ஆளும் கட்சியாக இருந்தது எனவும் பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சுரேஷ் கோபி 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடைப்பெற்ற மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் திருச்சூர் தொகுதியில் தான் போட்டியிட்டு தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மீண்டும் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட சுரேஷ் கோபி 74,686 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம், கேரளாவிலிருந்து பாஜகவின் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர் என்கிற பெருமையையும் சுரேஷ் கோபி பெற்றார்.