அரசியல்

"விசிகவுக்கு 10-க்கும் குறைவான தொகுதிகளே கிடைக்கும்.." தொண்டர்களிடம் உருக்கமாக பேசிய திருமாவளவன்!

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 10-க்கும் குறைவான தொகுதிகளே கிடைக்க வாய்ப்புள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


Thirumavalavan
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்படவுள்ள இடங்கள் குறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது தொண்டர்களிடையே பகிர்ந்துள்ள கருத்துகள் அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், முகநூல் நேரலை வாயிலாகத் திருமாவளவன் தனது கட்சித் தொண்டர்களிடம் உரையாற்றினார். அப்போது, திமுக கூட்டணியில் விசிகவுக்கு 10-க்கும் குறைவான தொகுதிகளே கிடைக்க வாய்ப்புள்ளதாக அவர் வெளிப்படையாகத் தெரிவித்தார். கட்சியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, தற்காலிக பின்னடைவாக இருந்தாலும் பெருந்தன்மையுடன் இந்த முடிவை ஏற்பதாக அவர் விளக்கமளித்தார்.

வேட்பாளர் தேர்வில் உள்ள சவால்கள்

கட்சியில் பல ஆண்டுகளாக உழைத்தவர்கள் சீட் கேட்டுத் தலைமைக்கு நெருக்கடி கொடுப்பதாகக் குறிப்பிட்ட திருமாவளவன், குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகள் கிடைப்பதால் தகுதியான வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் பெரும் சிரமம் நிலவுவதாகத் தெரிவித்தார். கடந்த காலங்களில் மக்கள் நலக் கூட்டணியில் 25 இடங்கள் கிடைத்தபோது இருந்த சுதந்திரம் இப்போது இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், விசிகவின் வளர்ச்சி என்பது ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து பயணிப்பதில்தான் உள்ளது என்பதை அவர் வலியுறுத்தினார்.

திமுக கூட்டணி வலுவாக உள்ளது

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், திமுகவுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாகவும், இன்னும் சில நாட்களில் தொகுதி எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாகத் தெரியும் என்றும் கூறினார். தொகுதிப் பங்கீட்டில் இழுபறி ஏதுமில்லை என்றும், ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை என்பது மட்டுமே உண்மை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் கூட்டணி நலனுக்கு எதிராகச் செயல்படாது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.