அரசியல்

முதல்வர் பேசும்போது அரட்டை அடித்த அமைச்சர்..எழுந்து வந்து எம்பி ஜெகத்ரட்சகன் செய்த காரியம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையில் உரையாற்றிய போது அவரை மதிக்காமல் அருகில் அரட்டை அடித்த அமைச்சர் நாசரின் செயலால் பரபரப்பு

முதல்வர் பேசும்போது அரட்டை அடித்த அமைச்சர்..எழுந்து வந்து எம்பி ஜெகத்ரட்சகன் செய்த காரியம்
முதல்வர் பங்கேற்ற நிகழ்வில் அமைச்சரின் செயல்
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில் கடந்த 18 ஆம் தேதி அரசு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோட் ஷோ பொன்னேரியில் நடைபெற்றது. வாகனத்தில் இருந்து இறங்கி சாலையில் நடந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து விழா அரங்கிற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1166 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

அரட்டை அடித்த அமைச்சர்

நேரமின்மை காரணமாக நிகழ்ச்சியில் எம்எல்ஏ உட்பட அமைச்சர் என யாருக்கும் பேச நேரம் ஒதுக்காமல் நேரடியாக தானே பேசுவதாக முதலமைச்சர் அறிவித்து உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது மேடையில் அமர்ந்திருந்த திருவள்ளூர் மாவட்டத்தின் அமைச்சர் நாசர் முதலமைச்சரை மதிக்காமல் அருகில் அமர்ந்திருந்த எம்.பி., சசிகாந்த் செந்திலுடன் அரட்டை அடித்து கொண்டிருந்தார்.

அரசு விழாவில் முதலமைச்சர் பேசும்போது, அவர் என்ன பேசுகிறார், மாவட்டத்திற்கு என்னென்ன திட்டங்களை அறிவிக்க போகிறார் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர் நாசர் கட்சியின் தலைவர், அமைச்சரவைக்கு முதன்மையானவர் என்ற மரியாதையின்றி முதலமைச்சர் பேசும்போது அருகில் இருந்த எம்.பி.,யுடன் அரட்டை அடித்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

திமுக எம்.பி., செய்த செயல்

இதனை கண்ட மூத்த திமுக நிர்வாகியான எம்.பி., ஜெகத்ரட்சகன் இரண்டு முறை சைகை செய்தும், அதனையும் கண்டு கொள்ளாமல் அமைச்சர் நாசர் அரட்டை அடித்தபடியே இருந்தார். ஒரு கட்டத்தில் நாற்காலியில் இருந்து எழுந்து சென்ற எம்.பி., ஜெகத்ரட்சகன், அமைச்சர் நாசரை தட்டி பேசாமல் இருக்குமாறு அறிவுறுத்தியதை தொடர்ந்து அமைச்சர் நாசர் தனது அரட்டையை நிறுத்தி கொண்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.