அரசியல்

CM Stalin: முதலமைச்சர் ஸ்டாலினின் அமெரிக்க பயணம் சாத்தியமா... இது என்ன முருகப் பெருமான் அரசியல்?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 22ம் தேதி அமெரிக்கா செல்லவிருப்பதாகக் கூறப்படும் நிலையில், இப்பயணம் இன்னும் சில பல நாட்களுக்கு தள்ளி வைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

CM Stalin: முதலமைச்சர் ஸ்டாலினின் அமெரிக்க பயணம் சாத்தியமா... இது என்ன முருகப் பெருமான் அரசியல்?

சென்னை: கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 6 லட்சம் கோடிக்கும் அதிகமாக முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்பின்னர் பேசியிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், 2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து இருந்தார். அதன்படி, இந்த மாதம் 22ம் தேதி அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தார் அவர். முன்னதாக துபாய், அபுதாபி, லண்டன், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் உட்பட ஐக்கிய அரபு நாடுகளுக்குச் சென்ற முதல்வர், அங்குள்ள முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார்.  

இதன் ஒருபகுதியாக ஆகஸ்ட் 22ம் தேதி முதல் அடுத்த 15 நாட்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருந்தது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணத் திட்டத்தில் திடீரென மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 27ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா செல்லவுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். இந்த பயணத்தின் போது கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சையை அவர் சந்திக்கவுள்ளார். அதேபோல், மைக்ரோசாப்ட் நிறுவன உயர் அதிகாரிகளை சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது..

முதலமைச்சர் ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்ட உயரதிகாரிகள் உடன் செல்கின்றனர். இதனிடையே முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றால், அரசு நிர்வாகத்தை யார் கவனித்துக் கொள்வார் என்ற கேள்விகள் எழுந்தன. இதனால் தனது மகனும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்பட்டது. அனைத்து பொறுப்புகளையும் அவரிடம் ஒப்படைத்துவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்லலாம் என சொல்லப்பட்டது. 

அதோடு அண்மைக்காலமாக உதயநிதி ஸ்டாலினுக்காக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு போலீஸார், கார்களின் எண்ணிக்கை என எல்லாமும் அதிகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், இது இன்னும் வதந்தியாகவே இருந்து வருகிறது. அதேநேரம் இன்றைய தினம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன பதில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது உதயநிதியை துணை முதலமைச்சராக்க கோரிக்கைகள் வலுத்து வருகிறதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின், வலுக்கிறதே தவிர பழுக்கவில்லையே என தக் லைஃப் கொடுத்தார். இதனிடையே ஆகஸ்ட் 24, 25ம் தேதிகளில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் முதலமைச்சர் கலந்துகொண்டே ஆக வேண்டும் என அவரது குடும்ப உறுப்பினர்கள் கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் பங்கேற்கவில்லை என்றால், முதலமைச்சர் ஸ்டாலின் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று விமர்சனம் வைக்கத் தொடங்கிவிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இதனை ஏற்றுகொண்ட ஸ்டாலின், முத்தமிழ் முருகன் மாநாட்டை தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றிவிட்டு, அதன் பிறகே அமெரிக்கா கிளம்பவுள்ளதாகக் கூறப்படுகிறது.