அரசியல்

கோட்சே வழியில் போகாதீங்க.. மாணவர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்..!

“மாணவர்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் வழியே செல்லக்கூடாது” என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

கோட்சே வழியில் போகாதீங்க.. மாணவர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்..!
CM Stalin in Trichy
சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் திருச்சி சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்குள்ள ஜமால் முகமது கல்லூரியின் பவள விழாவில் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்த விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கோவி.செழியன், எம்பி திருச்சி சிவா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மைதீன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதனையடுத்து, கல்லூரி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் ஸ்டாலின், “ஜமால் முகமது கல்லூரிக்கு இரண்டாவது முறை வருகை தந்துள்ளேன்.பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பல்வேறு திட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் கல்லூரி மாணவர்கள் நிகழ்ச்சி என்றால் உடனே ஓகே சொல்லிவிடுகிறேன். மாணவர்களை பார்த்தால் எனர்ஜி வருகிறது.

ஓரணியில் தமிழ்நாடு - என்ற முழக்கத்தோடு நின்றால் தமிழ்நாட்டை யாராலும் வீழ்த்த முடியாது. நான் அரசியல் பேசவில்லை, மாணவர்கள் நிச்சயம் அரசியல் புரிதல் இருக்க வேண்டும் என பேசுகின்றேன். கல்லூரிகள் எத்தனையோ பல தலைவர்களை நாட்டுக்கு கொடுத்திருக்கிறது. அப்படிப்பட்ட தலைவராக மாணவர்கள் நீங்களும் உருவாக வேண்டும்.

காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என நமக்கான பல வழிகள் இருக்கிறது. மாணவர்கள் ஆகிய நீங்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் வழியே செல்லக்கூடாது” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “நம் கல்லூரியில் பயின்று சாதித்த மாணவர்களை பார்க்கும் போது, நமக்கும் அவர்களை போன்று சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கும். அந்தவகையில் ஜமால் முகமது கல்லூரியில் பயின்ற பலர் இன்று தொடமுடியாத உயரத்தில் இருக்கிறார்கள். உங்கள் கல்லூரியின் சீனியர்களான அமைச்சர்கள் கே.என்.நேருவும், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் எங்கள் கேபினட்டின் சீனியர்கள். உழைத்தால் நீங்களும் அந்த கேபினட்டில் நிச்சயம் இடம்பெறலாம், பெறவேண்டும்.

கல்விதான் யாராலும் பறிக்க முடியாத ஒரே சொத்து. அத்தகைய சொத்தை மாணவர்களுக்கு கொடுப்பதோடு, திறன் மேம்பாட்டை வளர்க்கவும் அதற்கேற்ற வசதிகளை வழங்கவும் திமுக அரசு தயாராக இருக்கிறது. இளைய சமூகத்தை அறிவு சமூகமாக மாற்ற 20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி விரைவில் வழங்கப்படும்” என்று அவர் கூறினார்.