அரசியல்

ஸ்டாலின் ஆட்சி ‘Simply waste’ – இபிஎஸ் சாடல்

அதிமுகவும், பாஜகவும் இணக்கமாக இல்லை என கூறுவதற்கு திருமாவளவன் யார்? என இபிஎஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

 ஸ்டாலின் ஆட்சி ‘Simply waste’ – இபிஎஸ் சாடல்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
அதிமுகவின் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் தேர்தல் சுற்றுப்பயணத்தில் வடவள்ளி பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவை எதிர்த்து கூட்டணி கட்சிகள் ஒருபோதும் பேசியது இல்லை. ஏனென்றால் அடிமை சாசனம் எழுதிக்கொடுத்து விட்டார்கள்.

உங்களுக்கு பயம் வந்துவிட்டது

அதேபோல தொல்.திருமாவளவன் பேசுகிறார். அதிமுகவும், பாரதிய ஜனதாவும் இணக்கமாக இல்லை என்று, உங்களுக்கு வேண்டுமென்றால் nobel பரிசு கொடுத்து விடலாம். நீங்க வந்து பாருங்கள். நாங்கள் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறோம் என்று நாங்கள் அனைவரும் எப்பொழுதும் ஒற்றுமையாக தான் இருக்கிறோம். ஆனால் உங்களுடைய கூட்டணி கட்சிகள் இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் என்று வெட்ட வெளிச்சமாக மக்களுக்கு தெரிந்து கொண்டிருக்கிறது.

நாங்கள் எதையும் பிரித்துக்கூறவில்லை நீங்கள் சொல்வதை தான் நாங்கள் கூறுகிறோம். உள்துறை அமைச்சர் வந்தபோது நாங்கள் கூட்டணி அமைத்து விட்டோம். எங்கள் கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்கும் என கூறினார்.வெற்றி பெற்ற பிறகு அதிமுக ஆட்சி அமைக்கும் எங்களுடைய முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் என குறிப்பிட்டார். எங்களுடைய கூட்டணி அன்றைய தினமே தெளிவுபடுத்தப்பட்டு விட்டது.ஆனால் எங்களுடைய கூட்டணியை பார்த்து உங்களுக்கு பயம் வந்துவிட்டது. இன்னும் பல கட்சிகள் எங்களுடைய கூட்டணி கட்சிகளில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் நிறைய கூட்டணிகள் எங்கள் கூட்டணிக்கு நிச்சயம் வருவார்கள். நம்மளுடைய கூட்டணியை குறித்து எப்பொழுது அவர்கள் பேசினார்களோ அப்பொழுதே அவர்களின் பயம் தெரிந்துவிட்டது.

அவல ஆட்சி

2026-ல் 234 இடங்களில் 210-ல் அதிமுக நிச்சயம் வென்று ஆட்சி அமைக்கும். ஆனால் நீங்கள் வெல்வோம் என நினைப்பது ஒருபோதும் நடக்காது. ஏனென்றால் நீங்கள் மக்களுக்கு ஏதாவது செய்திருந்தால் தானே மக்கள் உங்களை நினைத்துப் பார்ப்பார்கள். நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் மக்களை மட்டுமே நினைத்துப் பார்க்கிறீர்கள். ஆனால் பாரதிய ஜனதாவும், அதிமுகவும் மக்களை பற்றி சிந்திக்கும் கவலைப்படும் கட்சி. அதுதான் நம்மளுக்கு மிகப்பெரிய பலம்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்று ஸ்டாலின் 50 மாதங்கள் ஆட்சி நடத்தி இருக்கிறார்.ஆனால் கோவை மாவட்டத்திற்கு ஏதாவது புதிய திட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறதா? பிறகு எப்படி வந்து மக்களிடம் ஓட்டு கேட்பார். அதேபோல திமுக ஆட்சிக்கு வந்தாலே ரவுடிக்கு சம்பந்தம் விடும். சிறுமியிலிருந்து பாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருக்கிறது. பொம்மை முதல்வர், திறமையற்ற முதல்வரால் இதை தடுக்க முடியவில்லை. கொங்கு மண்டல பகுதிகளில் முதியவர்கள் எங்கு வசிக்கிறார்களோ அங்கு கொள்ளை கூட்டம் உள்ளே புகுந்து அவர்களை கடுமையாக கொலை செய்திருக்கிறது. இந்த செய்தி எல்லா தொலைக்காட்சிகளிலும் வந்திருக்கிறது. இதை தடுக்க இந்த ஆட்சியில் திராணி இல்லை. மதுரையில் கஞ்சா விற்பதாக தந்தையும், மகனும் புகார் கொடுக்கிறார்கள். இதைத் தெரிந்து கொண்டவர்கள் வீடு புகுந்து அவர்களை வெட்டிக்கொலை செய்கிறார்கள். இன்றைய தினம் இந்த செய்தி தொலைக்காட்சிகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட அவல ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

பாதுகாத்துக் கொள்ள வேண்டும்

மக்கள் அரசாங்கத்தை நம்பி இருக்கிறார்கள். காவல்துறை சிறப்பாக செயல்பட்டால்தான் மக்களை பாதுகாக்க முடியும். பயிர்களுக்கு வேலி எப்படி முக்கியமோ அது போல பாதுகாப்பு மக்களுக்கு அவசியம். திமுக ஆட்சி இருக்கும் வரை மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதிமுக ஆட்சி இருக்கும் வரை சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது.ஆனால் தினம்தோறும் மக்கள் அச்சத்தில் உறைந்து வாழும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.

கோவையில் காவல் வாகன ஓட்டுனரும், அவருடைய மனைவியும் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அவரை வெட்டி நகையை பறித்துச் சென்றுள்ளனர். மக்களை பாதுகாக்கும் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லாத நிலை கோயம்புத்தூரில் இருக்கிறது. இப்படியே போனால் தமிழகம் வேறு மாதிரியாய்விடும். இப்படி ஒரு ஆட்சி தமிழகத்திற்கு தேவையே இல்லை. மக்களை கண்ணின் இமைகள் போல பாதுகாத்தது. திமுக ஆட்சிக்கு வந்து விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு, குடிநீர் வரி என மக்களை துன்பத்தில் தள்ளி உள்ளது.

குப்பை அரசாங்கம்

பல மாவட்டங்களில் செய்த தவறின் காரணமாக வரி மேல் வரி போட்டு, மக்களின் தலையில் சுமையை வைத்துவிட்டனர். அதுமட்டுமில்லாமல் குப்பைக்கே வரி போட்டு அரசாங்கம் ஸ்டாலின் அரசாங்கம் தான். இனிமேல் அதனால் அதை குப்பை அரசாங்கம் என்று சொல்ல வேண்டும். இவர்கள் வரி போடாத இடமே கிடையாது. அதிமுக ஆட்சியில் 11 அரசு மருத்துவமனை கொண்டுவரப்பட்டது. இது எந்த ஆட்சியில் ஆவது இருந்ததா? தனியார் மருத்துவமனைக்கு இணையாக அரசு மருத்துவமனை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நம்முடைய ஆட்சியில் கோவை மாநகரத்தில் மட்டும் 5 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஆனால் உங்களால் ஒரு கல்லூரி கொடுக்க முடிந்ததா? அதேபோல ஏழு சட்டக் கல்லூரிகள் திறக்கப்பட்டிருக்கிறது.

கால்நடை மருத்துவக்கல்லூரி, கால்நடை பூங்கா ஆயிரம் கோடியில் திறக்கப்பட்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் மாணவர்கள் பட்டப்படிப்பு படித்தவர்களாக இருக்கிறார்கள். அதற்குக் காரணமே நம் ஆட்சியில் கொடுத்த கல்லூரிகள் தான். ஆனால் உங்க ஆட்சியில் என்ன கட்டி இருக்கிறீர்கள். கோவில் பணம் மிச்சம் இருந்தது. அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், கோயிலை பார்த்தாலே கண் உறுத்தியது போல.. அதை வைத்து கல்லூரி கட்டுகிறோம் என்றார்கள். நீங்கள் எதற்காக உண்டிகளில் பணம் போடுகிறீர்கள்..கோவிலில் நற்பணிகளுக்காக செலுத்துகிறீர்கள். அந்தப் பணத்தை எடுத்து இவர்கள் கல்லூரி கட்டுகிறார்களாம். ஏன் அதை இவர்களின் அரசாங்க பணத்தில் இருந்து கட்ட வேண்டியதுதானே?. வேண்டுமென்றே திட்டமிட்டு அறநிலைத்துறை நிதியை எடுத்து நீங்கள் இப்படி கட்டுவது எந்த விதத்தில் நியாயம்,?.. இதையெல்லாம் ஒரே சதிச் செயலாக தான் மக்கள் பார்க்கிறார்கள். நாங்கள் கல்வியை வேண்டாம் என்று எப்பொழுதும் சொல்லவே இல்லை. அந்தக் கல்விக்கான பணத்தை அரசாங்கத்தில் இருந்து கொடுக்க வேண்டும்.

மக்கள் கடுமையாக பாதிப்பு

அதிமுக ஆட்சியில் இவ்வளவு கல்லூரிகள் கட்டிக் கொடுத்திருக்கிறோமே? அதேபோல் நீங்களும் செய்திருக்கலாமே?.. இப்படி இருக்கும் பொழுது ஒரு சாதாரண கலை கல்லூரியை கூட உங்களால் கட்ட முடியவில்லையா?.. இங்கு இருக்கக்கூடிய தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், 225 ஏக்கர் இருக்கிறது. பயிர் வகைகளை, மானாவாரி பயிர்களை எப்படி விடுவது என்பதற்கான பயிற்சி கொடுப்பதற்காக, விவசாயிகள் பயனடைவதற்காக, அருப்புக்கோட்டை ஆராய்ச்சி நிலையத்திற்கு, கொடுக்கப்பட்டதை தற்போது சிப்காட்டுக்கு ஒதுக்க பார்க்கிறார்கள். அதற்காக ஆராய்ச்சி செய்வதற்காக நிலங்கள் இருக்கிறது. அதையும் உங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆராய்ச்சியாளர்கள் விவசாயிகள் எல்லாம் கொதித்து போய் இருக்கிறார்கள். நான் ஒரு விவசாயியாக இருக்கிறேன், ஆராய்ச்சி நிலையம் மிகவும் முக்கியம். நிச்சயம் இதை தடுத்து நிறுத்துவேன். இந்த முதல்வருக்கு எதைப் பற்றியும் தெரியாது. மக்கள்தான் நீதிபதிகள் அவர்களின் மனம் எப்படி இருக்கிறது என்பதை புரிந்து தான் செயல்பட வேண்டும். ஆனால் இன்றைய முதல்வர் அவரின் குடும்ப மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதை அறிந்து ஆட்சி நடத்துகிறார்.

வருகிற சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அதேபோல பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் அளித்தவர்களுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை வழங்கவில்லை. அதையும் இந்த அரசு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் அப்படி வழங்கவில்லை என்றால் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அதை உடனடியாக வழங்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதுமட்டுமல்ல, நம்முடைய கோவை மாநகரம் வளர்ந்து வரும் மாநிலம், தொழில் நகரம். ஆனால் திமுக ஆட்சியில் தொழில்கள் நலிவடைந்துவிட்டது. மின் கட்டணம் போன்றவைகளால் மக்கள் கடுமையாக பாதிக்கிறார்கள். இந்த தொழிலை தவிர வேறு எங்களுக்கு எந்த தொழிலும் தெரியாத என தொழிலாளர்கள் மனக்குமுறலை வெளிப்படுத்துகிறார்கள். இந்த அரசாங்கம் எங்களை வஞ்சிக்கிறது என கூறியிருக்கிறார்கள் அதையும் நான் சிறக்க அதிமுக ஆட்சி வந்ததும் செய்து தரப்படும். அதேபோல மொத்தத்தில், ஸ்டாலின் ஆட்சி "Simply waste" என்று தான் சொல்ல வேண்டும். 2026-ல் ஸ்டாலினின் மாய ஆட்சியை ஒழித்து அதிமுக ஆட்சியை நிலை நிறுத்துவோம்” என தெரிவித்தார்.