அரசியல்

பாஜக விவகாரத்தில் வரலாற்றுப் பிழை செய்தது கருணாநிதியும் எடப்பாடியும்தான்: சீமான் குற்றச்சாட்டு

ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியதற்கு காரணம் அவரது தன்மானம் தான் என்றும், தேமுதிகவின் பிரேமலதா முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தது திட்டமிட்ட ஒன்று தான் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

பாஜக விவகாரத்தில் வரலாற்றுப் பிழை செய்தது கருணாநிதியும் எடப்பாடியும்தான்: சீமான் குற்றச்சாட்டு
Seeman Blames Karunanidhi and Edappadi for Historic Blunders with BJP
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பகுதியில் பத்திரிகையாளர் மற்றும் யூடியூபர் ஏகலைவன் தாயார் அன்னபூரணியின் மறைவையொட்டி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று அன்னபூரணியின் உடலுக்கு மாலை அணிவித்து, அவரது மறைவினால் வாடும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான், பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேசினார். அதன் விவரம் பின்வருமாறு-

ஓபிஎஸ் விலகல் குறித்து:

”பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்) இருக்க வேண்டும் என்று அவர்கள் (அதிமுக+பாஜக) விரும்பவில்லை. பிரதமரை சந்திக்க நேரம் கேட்டும் கிடைக்கவில்லை. இரண்டு முறை முதலமைச்சராக இருந்த ஓ.பி.எஸ், நீண்ட அனுபவம் உள்ள அரசியல் தலைவர். அவருக்கு தன்மானம் உள்ளது. அதனால்தான் அவர் கூட்டணியை விட்டு வெளியேறியிருப்பார்" என்று அவர் கூறினார்.

பிரேமலதா- முதலமைச்சர் சந்திப்பு:

”தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், முதலமைச்சரை சந்தித்தது நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். அதிமுக கூட்டணியில் தேமுதிக-வுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை, மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்கப்படவில்லை. இதன் காரணமாக அவர்கள் திமுக கூட்டணியில் சேர வாய்ப்புள்ளது” என சீமான் தனது கருத்தை வெளிப்படுத்தினார்.

செஞ்சிக் கோட்டை மற்றும் பாஜக:

செஞ்சிக் கோட்டையை தங்கள் பாட்டனார் கோட்டை எனக் குறிப்பிட்ட சீமான், "பாஜக அரசு யாரைக் கேட்டு இதை மராட்டிய மன்னர்கள் கோட்டை என்று கூறியது?" என்று கேள்வி எழுப்பினார். 300 ஆண்டுகளாக ஆனந்த கோன், கிருஷ்ண கோன் போன்ற யாதவ மன்னர்கள் ஆட்சி செய்ததற்கான கல்வெட்டுகள் இருப்பதாகவும், ஆனால் பாஜக அரசு திடீரென அதை மராட்டியர்களின் கோட்டை என அறிவித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், ராஜேந்திர சோழனுக்கு வெளியிடப்பட்ட நாணயங்களில் ஆங்கிலம் மற்றும் இந்தி இருந்தும், தமிழ் இல்லை என்று சீமான் ஆதங்கப்பட்டார்.

பாஜக கூட்டணி- வரலாற்றுப் பிழை:

பாஜகவின் ஆட்சியை கலைத்தது ஜெயலலிதா செய்த வரலாற்று பிழை என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சைகளை கிளப்பிய நிலையில், இதுக்குறித்து சீமான் கருத்து தெரிவித்தார். ஜெயலலிதா, பாஜக ஆட்சியை கலைத்தது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு என்றும், பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஒரு வரலாற்றுப் பிழை என்று அவரே கூறியதாகவும் சீமான் நினைவு கூர்ந்தார். ஜெயலலிதா இறக்கும் வரை பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றும், ஆனால் கருணாநிதி பாஜகவுடன் கூட்டணி வைத்து 5 ஆண்டுகள் ஆட்சி செய்தது ஒரு பெரும் வரலாற்றுப் பிழை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோல், தற்போதைய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி வைத்து வரலாற்றுப் பிழை செய்திருப்பதாக சீமான் தெரிவித்தார். "தமிழ்நாட்டில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதால் அதிமுகவுக்கு என்ன வரப்போகிறது?" எனக் கேள்வி எழுப்பிய அவர், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவின் கருத்துகளை விமர்சித்தார்.