சென்னை கொட்டிவாக்கத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி இன்று (செப். 22) நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு மீனவ மக்களுக்கு பாஜக உறுப்பினர் சேர்க்கைக்கான அடையாள அட்டைகளை வழங்கினார். இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அவர், “பிரதமர் நரேந்திர மோடி மீனவர்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மீனவர்கள் வெளிநாட்டிற்கு கடல் பொருட்கள் ஏற்றுமதி செய்ய வேண்டும். அதன்மூலம் அந்நிய செலவாணி மூலம் அதிகளவில் பணம் கிடைக்கும். ஆழ்கடல்களில் டிராலர் வைத்து மீன்பிடிப்பதால் அதிகளவில் வியாபாரம் பார்ப்பதாக கூறப்படுகிறது. உலக வர்த்தக சபையில் பெரிய பெரிய கப்பல்கள் வைத்திருப்பவர்களின் வியாபாரம் பெருகுவது குறித்து விரைவில் விவாதிக்கப்படும். பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்பேரில் இந்தியாவில் பாரம்பரிய மீனவர்கள் குறித்து எடுத்துக்கூறி பாரம்பரிய மீனவர்களுக்கு எவ்வித நஷ்டமும் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்கிறோம்.பாரம்பரிய மீனவர்களின் அதிகாரங்கள் குறையாமல் இருக்க நாங்கள் போராடி வருகிறோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “எதிர்கட்சிகள் ஏழை மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என பிரசாரம் செய்கின்றனர். பாரம்பரிய மீனவர்களின் அதிகாரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கிறோம். பொய் பிரசாரங்களை நம்ப வேண்டாம். மீனவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற பிரதமர் மோடி தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் இந்த நாட்டு மக்களின் நலனுக்காக பாடும் படுவதை இத்தனை ஆண்டு கால ஆட்சியின் மூலமே நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள்” என்றார்.
மேலும் படிக்க: உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... வானிலை ஆய்வு மையம் சொன்ன புதிய தகவல்!
மேலும், “தமிழகத்திலும் பாஜக ஆட்சி அமைக்கும். அதற்கான பணிகள் 6 ஆண்டுகளாக பெரிய அளவில் நடக்கிறது. சில குடும்பங்களுக்கு மட்டும் பதவி என்பது பாஜகவில் இருக்காது. எளியவரும் பெரிய தலைவர் ஆகலாம். மிகப்பெரிய கட்சி என்றால் அது பாஜக-தான். பெரிய கட்சி என்றால் அதிக உறுப்பினர்கள் இருக்கறார்கள் என்று அர்த்தம். ஜாதி, மதம், சிறியவர், பெரியவர், தாழ்ந்தவர், உயர்ந்தவர் என்ற எவ்வித வித்தியாசமும் இல்லாமல் அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கும் கட்சி பாஜக மட்டும்தான். மகன், மாமா, மாப்பிள்ளைதான் கட்சியின் தலைவராக இருக்க வேண்டுமா என்ன?பாஜக திறமை, உழைப்புக்கு போதுமான வாய்ப்பு வழங்கும். எல்லோருக்கும் சமமான வாய்ப்பு வழங்கும்” என பெருமையாகப் பேசினார்.