அரசியல்

TVK Vijay: தவெக புதுச்சேரி நிர்வாகி திடீர் மறைவு... கலங்கிய புஸ்ஸி ஆனந்த்... ஆறுதல் சொன்ன விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் பாண்டிச்சேரி மாநில செயலாளர் சரவணன் மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் விஜய் போனில் ஆறுதல் கூறினார்.

TVK Vijay: தவெக புதுச்சேரி நிர்வாகி திடீர் மறைவு... கலங்கிய புஸ்ஸி ஆனந்த்... ஆறுதல் சொன்ன விஜய்!
தவெக நிர்வாகி மறைவு - விஜய் இரங்கல்

புதுவை: விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. சுமார் 1.5 லட்சம் பேர் வரை இந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தவெக தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உட்பட தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும், மாநாட்டுக்கான வேலைகளில் பிஸியாக உள்ளனர். இந்நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மிக முக்கியமான நிர்வாகி உயிரிழந்தது அக்கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  

பாண்டிச்சேரி தவெக மாநில செயலாளராக பதவி வகித்து வந்தவர் சரவணன். தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் 25 வருட கால நண்பரும் அவரது நெருங்கிய உதவியாளருமான சரவணன், விஜய் மக்கள் இயக்க பாண்டிச்சேரி மாநில பொறுப்பாளராக இருந்தவர். அதன்பின்னர் தமிழக வெற்றிக் கழகத்தின் பாண்டிச்சேரி மாநில செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டு சரவணன் உயிரிழந்துள்ளார். இதனையறிந்த பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாநாடு வேலைகளை அப்படியே விட்டுவிட்டு புதுச்சேரிக்கு விரைந்தார்.

அங்கு அவர் சரவணனின் உடலை பார்த்து கதறி அழுதது பலரையும் கண்கலங்க வைத்தது. இதனையடுத்து சரவணன் மறைவுக்கு தவெக தலைவர் விஜய் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்தார். அதில், தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி, என் மீதும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதும் தீரா பற்றுக்கொண்டவர், கழகத்திற்காக அயராது ஓடோடி உழைத்த கழகப் போராளி புதுச்சேரி சரவணன் திடீர் உடல்நலக் குறைவால் காலமானது அதிர்ச்சியையும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது. சரவணனை பிரிந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டிருந்தார்.

இந்த இரங்கல் செய்தியை தொடர்ந்து, பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை செல்போனில் தொடர்புகொண்ட விஜய், சரவணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். விஜய் செல்போனில் ஆறுதல் சொன்னதை கேட்டு, சரவணின் குடும்பத்தினர் கதறி அழுதனர். மாநாடு நெருங்கி வரும் நிலையில், தவெகவின் மிக முக்கியமான நிர்வாகி உயிரிழந்தது, அக்கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் தவெக மாநாட்டுக்கான வேலைகள் எந்த தடையும் இல்லாமல் வேகமாக நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. தவெக மாநாட்டுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால், இறுதிக்கட்ட பணிகள் சீக்கிரமே முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தவெக மாநாட்டுக்கு முன்பாக, தற்போது உயிரிழந்த நிர்வாகி சரவணன் வீட்டுக்கு விஜய் நேரில் செல்ல வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. புஸ்ஸி ஆனந்தின் வலது கரமாக வலம் வந்த சரவணன், விஜய்யின் குட் புக்கிலும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் மறைந்த சரவணின் வீட்டுக்கு, விஜய் நேரில் செல்வது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.