அரசியல்

பாமக நிறுவனர் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதி!

பாமக நிறுவனர் ராமதாஸ் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதி!
PMK founder Ramadoss admitted to hospital
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இருதயப் பரிசோதனைகளுக்காகச் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து வெளியாகியுள்ள முதற்கட்டத் தகவலில், அவருக்கு இருதயம் சம்பந்தமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தை - மகன் இடையே விரிசல்

பா.ம.க.வில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்களுக்கு மத்தியில் இந்தச் செய்தி வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த பா.ம.க. பொதுக்குழுக் கூட்டத்தில், ராமதாஸ் தனது பேரன் முகுந்தனை இளைஞர் பிரிவுத் தலைவராக அறிவித்தார். இதற்கு, அவரது மகனும் பா.ம.க. தலைவருமான அன்புமணி ராமதாஸ் எதிர்ப்புத் தெரிவித்ததால், இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது.

இதன் பிறகு, கடந்த மே மாதம் நடந்த வன்னியர் சங்க மாநாட்டில் பேசிய ராமதாஸ், "பாமக தலைவராக நானே இருப்பேன், தேர்தல் முடிவுகளை நானே எடுப்பேன்" என்று அறிவித்தார். பா.ம.க. தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ், செயல்தலைவராகச் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இரு தரப்பிலும் புதிய நிர்வாகிகளை நியமிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தன.

இதற்கிடையே, அன்புமணி ராமதாஸ் 'தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்' என்ற பெயரில் ஜூலை 25ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், ராமதாஸ் விரைவில் 'கிராமங்களை நோக்கிப் பயணம்' என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த நிலையில், அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.