அரசியல்

ஸ்டாலின் - ராகுல் காந்தி இணைந்து பிரசாரம்? ஆர்.எஸ். பாரதி விளக்கம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து ராகுல் காந்தி ஒரே மேடையில் பிரசாரம் செய்ய வாய்ப்பில்லை என்று ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் - ராகுல் காந்தி இணைந்து பிரசாரம்? ஆர்.எஸ். பாரதி விளக்கம்!
R S Bharathi
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். ஆனால், இந்த முறை அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து ஒரே மேடையில் பிரசாரம் செய்ய வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சகட்டப் பரபரப்பில் உள்ளது. இதற்காகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளையும், ஏப்ரல் 20-ஆம் தேதியும் தமிழகத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். ராகுல் காந்தி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகிய இருவரும் நாங்குநேரி தொகுதியில் இணைந்து பிரசாரம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அது சாத்தியமில்லை எனத் தெரியவந்துள்ளது.

நேரம் இல்லாததே காரணம்

இது குறித்துச் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் இணைந்து பிரசாரம் செய்ய வாய்ப்பில்லை என்று கூறினார். முதலமைச்சர் இன்னும் 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்குச் செல்ல வேண்டி இருப்பதால், ஏற்கனவே திட்டமிடப்பட்ட அவரது பயணத் திட்டத்தை இறுதி நேரத்தில் மாற்றுவது கடினம் என அவர் விளக்கமளித்தார். ராகுல் காந்தி ஒரு பகுதியிலும், முதலமைச்சர் மற்றொரு பகுதியிலும் தனித்தனியாகத் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார்கள் என அவர் தெரிவித்தார்.

எல்லாம் ஒன்றுதான்

ராகுல் காந்தி தனித்துப் பிரசாரம் செய்தாலும், அவர் திமுக கூட்டணிக்குத்தான் வாக்கு சேகரிப்பார் என்றும், ராகுல் காந்தியின் பிரசாரக் கூட்டங்களில் திமுக நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என்றும் ஆர்.எஸ். பாரதி கூறினார். "நாங்கள் காங்கிரசுக்காகவும், அவர்கள் எங்களுக்காகவும் வாக்கு கேட்கிறோம்; எல்லாம் ஒன்றுதான்" என்று குறிப்பிட்ட அவர், கூட்டணிக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்தினார்.