அரசியல்

நாஞ்சில் சம்பத்துக்கு தவெகவில் முக்கிய பொறுப்பு: விஜய் அறிவிப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைச் செயலாளராக நாஞ்சில் சம்பத் நியமிக்கப்படுவதாக கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

நாஞ்சில் சம்பத்துக்கு தவெகவில் முக்கிய பொறுப்பு: விஜய் அறிவிப்பு!
Nanjil Sampath
திராவிடக் கட்சிகளில் சிறந்த பேச்சாளராக வலம் வந்த எழுத்தாளர் நாஞ்சில் சம்பத், தமிழக வெற்றிக் கழகத்தில் நேற்று இணைந்த நிலையில், அவர் கட்சியின் பரப்புரைச் செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்படுவதாகக் கட்சியின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

விஜய்யின் அதிகாரப்பூர்வ அறிக்கை

நாஞ்சில் சம்பத் நியமனம் குறித்துத் தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளுள் ஒருவர், சிறந்த பேச்சாளர், அனைவரிடத்திலும் இனிமையாகப் பழகக் கூடியவர், அண்ணன் நாஞ்சில் சம்பத், தம்மைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டுள்ளார். மக்களுக்கான அரசியலில் நம்மோடு பயணிக்க இருக்கும் அவரை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அண்ணன் நாஞ்சில் சம்பத், கழகத்தின் பரப்புரைச் செயலாளர் (Campaign Secretary) பொறுப்பில் நியமிக்கப்படுகிறார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.

பொதுச் செயலாளருடன் இணைந்து பணியாற்ற அறிவுறுத்தல்

புதிய பொறுப்பேற்றுள்ள நாஞ்சில் சம்பத், பொதுச் செயலாளர் என். ஆனந்துடன் இணைந்து தன்னுடையப் பணிகளை மேற்கொள்வார் என்றும் விஜய் அறிவித்துள்ளார். மேலும், கழகநிர்வாகிகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, மக்கள் பணியாற்றிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாஞ்சில் சம்பத்தின் பின்னணி

எழுத்தாளரும் பேச்சாளருமான நாஞ்சில் சம்பத், முன்பு மதிமுகவில் கொள்கை பரப்புச் செயலாளராகவும், பின்னர் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளிலும் இணைந்து அரசியல் பயணம் மேற்கொண்டவர். அவர் நேற்று (டிசம்பர் 5) பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வாரங்களாகவே, தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக நாஞ்சில் சம்பத் பேசி வந்ததும் குறிப்பிடத்தக்கது.