அரசியல்

பூச்சாண்டி வேலை வேண்டாம்; தேர்தலில் மோதிப் பார்ப்போம்- விஜய் சவால்!

பிரதமர் மோடியோ, அமித்ஷாவோ வந்தால், இவ்வாறு நிபந்தனை போடுவீர்களா? என்று தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

பூச்சாண்டி வேலை வேண்டாம்; தேர்தலில் மோதிப் பார்ப்போம்- விஜய் சவால்!
TVK Vijay
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். நாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது பேசிய அவர், திமுக மற்றும் பாஜக அரசுகளை கடுமையாக விமர்சித்தார். மேலும், நிபந்தனைகள் விதித்து மிரட்டிப் பார்க்க வேண்டாம் என்றும் நேரடியாகத் தேர்தல் களத்தில் மோதிப் பார்ப்போம் என்றும் ஆவேசமாகத் தெரிவித்தார்.

நிபந்தனைகள் விதித்து மிரட்டிப் பார்க்கிறீர்களா?

நாகப்பட்டினம் புத்தூர் ரவுண்டானா பகுதியில் தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜய், தனது பிரச்சாரத்திற்கு அனுமதி கோரியபோது அரசுத் தரப்பில் ஏகப்பட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினார். மின் தடை, நெருக்கடியான இடத்தை மட்டுமே தேர்வு செய்ய அனுமதிப்பது, பேருந்துக்குள்ளேயே இருக்க வேண்டும், கையசைக்கவோ சிரிக்கவோ கூடாது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

"இதையெல்லாம்விட, பஸ் விட்டு வெளியில் வரக்கூடாது, கையசைக்கக் கூடாது என்றெல்லாம் நிபந்தனைகள். மிரட்டிப் பார்க்கிறீர்களா? உங்களுக்கே இவ்வளவு இருந்தால், சொந்தமாக உழைத்து வந்த எனக்கு எவ்வளவு இருக்கும்? நம் பிரதமர் மோடியோ, அமித்ஷாவோ வந்தால், இவ்வாறு நிபந்தனை போடுவீர்களா? மின்சாரத்தைத் துண்டிப்பீர்களா?" என அவர் கேள்வி எழுப்பினார்.

திமுக, பாஜக மீது கடும் விமர்சனம்

மீனவர்கள் மற்றும் ஈழத் தமிழர்கள் குறித்துப் பேசிய விஜய், "மீனவர்களுக்காக வெறும் கடிதம் மட்டும் எழுதிவிட்டு அமைதியாக இருக்க நாம் ஒன்றும் கபட நாடக திமுக அரசு இல்லை. தமிழக மீனவர்கள், இந்திய மீனவர்கள் என்று பிரித்துப் பார்க்கும் பாசிச பாஜக அரசும் இல்லை" என்று கடுமையாக விமர்சித்தார். ஈழத் தமிழர்கள் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களுக்காகக் குரல் கொடுப்பது தனது கடமை என்றும் அவர் தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி

முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் குறித்தும் விஜய் கேள்வி எழுப்பினார். "முதல்வர் வெளிநாடு சென்று வந்தார். அவர் செய்தது வெளிநாட்டு முதலீடா? ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் முதலீடா? குடும்பத்தின் முதலீடு வெளிநாட்டுக்குச் செல்கிறதா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய அவர், "மக்களோடு மக்களாக நிற்பதுதான் என்னுடைய வேலை. இது புரிய வேண்டியவர்களுக்குப் புரிய வேண்டும். இனிமேல், இவ்வாறு நிபந்தனைத் தடையிட்டால், நான் மக்களிடமே அனுமதி கேட்பேன். பூச்சாண்டி வேலை வேண்டாம்; தேர்தலில் மோதிப் பார்ப்போம்" என்று சவால் விடுத்தார்.