அரசியல்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்.. விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள Y பிரிவு பாதுகாப்பை மேம்படுத்த பரிந்துரை..?

தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள Y பிரிவு பாதுகாப்பை, Y+ அல்லது அதற்கு மேலான Z பிரிவு பாதுகாப்பாக அதிகரிக்க CRPF தரப்பிலிருந்து பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்.. விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள Y பிரிவு பாதுகாப்பை மேம்படுத்த பரிந்துரை..?
Recommendation to improve Y category security given to Vijay..?
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மற்றும் நடிகர் விஜய்க்கு தற்போது வழங்கப்பட்டுள்ள Y பிரிவு பாதுகாப்பை, அதைவிட அதிகபட்சப் பாதுகாப்பான Y+ அல்லது Z பிரிவு பாதுகாப்பாக அதிகரிக்க மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம் இது குறித்து அறிக்கை கேட்டிருந்த நிலையில் இந்தப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு அதிகரிக்கக் காரணம் என்ன?

கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், தமிழ்நாட்டில் பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு எதிரான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.

விஜய்யின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ‘ஒய்’ பிரிவு அதிகாரிகளிடம் உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டிருந்தது. விஜய்க்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்படுகிறதா? குறிப்பாக கரூர் பிரச்சாரக் கூட்டத்தின்போது எந்த அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன? அப்போது விஜய்க்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டதா? என்று பல கேள்விகளை உள்துறை அமைச்சகம் எழுப்பியது. இந்த நிலையில், விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு போதுமானதாக இருக்காது என்று CRPF பரிந்துரைத்துள்ளதாகத் தெரிகிறது.

தற்போதைய Y பிரிவு பாதுகாப்பு

தற்போது விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள Y பிரிவு பாதுகாப்பின்படி, அவரைப் பாதுகாக்க 8 பேர் கொண்ட பாதுகாப்புப் படை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதில் மத்திய ஆயுதப்படை போலீஸ் அதிகாரிகள் மற்றும் தமிழக போலீசார் இடம்பெற்றுள்ளனர்.

CRPF-ன் பரிந்துரையின்படி, விஜய்க்கு Y+ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டால், தனிப்பட்ட பாதுகாவலர்களின் எண்ணிக்கை 11 ஆக உயரும். Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டால், 22 மத்தியப் போலீஸ் பாதுகாவலர்கள் மற்றும் உள்ளூர் போலீஸ் படை உள்ளிட்ட மேலும் அதிக வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

விஜய்க்கு அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நிலையை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பாதுகாப்பு மதிப்பீட்டுக் குழு (Security Assessment Committee) விரைவில் இறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.