அரசியல்

'நான் யாரையும் சந்திக்கவில்லை.. வதந்திகளைப் பரப்பாதீர்கள்'- முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

தான் அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.

'நான் யாரையும் சந்திக்கவில்லை.. வதந்திகளைப் பரப்பாதீர்கள்'- முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
Sengottaiyan
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று கோரி செங்கோட்டையன், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குக் கெடு விதித்தார். இதைத் தொடர்ந்து, அவரது கட்சிப் பதவிகள் அதிரடியாகப் பறிக்கப்பட்டன. இதற்கிடையே, நேற்று (செப். 26) அவர் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தைச் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகின.

செங்கோட்டையன் விளக்கம்

இந்தச் சூழ்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன் கூறியதாவது:
"நான் பல்வேறு விளக்கங்களை அளித்த பிறகும் வேண்டுமென்றே சில வதந்திகளைப் பரப்பி வருவது வேதனை அளிக்கிறது. நான் அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை. என்னுடைய மனைவி சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைப் பார்ப்பதற்காகத்தான் நான் சென்னைக்குச் சென்றேன்.

சொந்த வேலைகளை முடித்துவிட்டு ஈரோட்டில் துக்க நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ள வந்துவிட்டேன். தொடர்ந்து வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். என்னுடைய நோக்கம் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும், இந்த இயக்கம் வலிமை பெற வேண்டும் என்பதே. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவு நிறைவேற வேண்டும் என்பதற்காகத்தான் கடந்த 5-ஆம் தேதி பேசினேன். அதற்குப் பிறகு நான் எந்தக் கருத்தையும் யாரிடமும் கலந்து ஆலோசிக்கவோ, அரசியல் ரீதியாக சந்திக்கவோ இல்லை. நான் மீண்டும் ஒருமுறை பதிவு செய்துகொள்கிறேன்" என்றார்.

வதந்தி பரப்புவோர் குறித்து...

வதந்திகளைப் பரப்புவது யார் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. யார் பரப்புவார்களோ அவர்களே நிறுத்திக்கொள்வது நலமாக இருக்கும்" என்று தெரிவித்தார்.