அரசியல்

உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: இபிஎஸ் சுற்றுப்பயணத்துக்கு நாமக்கல் போலீஸ் அனுமதி மறுப்பு!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தையடுத்து, எடப்பாடி பழனிசாமியின் நாமக்கல் மாவட்ட சுற்றுப்பயணத்துக்குக் காவல்துறை அனுமதி மறுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: இபிஎஸ் சுற்றுப்பயணத்துக்கு நாமக்கல் போலீஸ் அனுமதி மறுப்பு!
Namakkal Police denies permission for EPS Campaign
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தையொட்டி, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் அரசியல் கட்சியினர் ரோட் ஷோ மற்றும் பிரசாரம் செய்ய உயர்நீதிமன்றம் விதித்த தடையின் காரணமாக, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நாமக்கல் மாவட்ட சுற்றுப்பயணத்துக்குக் காவல்துறை அனுமதி மறுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நெடுஞ்சாலைகளில் அனுமதி மறுப்பு

‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக அவர், நாளை (அக். 5) திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளிலும், நாளை மறுநாள் (அக். 6) நாமக்கல் நகரம், பரமத்திவேலூர் ஆகிய தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.

இதற்காக அ.தி.மு.க.வினர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் அனுமதி கேட்டிருந்தனர். திருச்செங்கோடு பகுதியில் அண்ணா சிலை அருகே, குமாரபாளையம் ராஜன் திரையரங்கு முன்புறம், நாமக்கல் நகரில் பழைய பேருந்து நிலையம் அருகில் மற்றும் வேலூர் பொத்தனூர் பிரிவு சாலை ஆகிய இடங்களில் அனுமதி கோரப்பட்டது.

ஆனால், அ.தி.மு.க.வினர் தேர்வு செய்த இந்தப் பகுதிகள் அனைத்தும் மாநில நெடுஞ்சாலையில் உள்ளன. இதனால், உயர்நீதிமன்ற உத்தரவின்படி அனுமதி அளிக்க முடியாது என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நிபந்தனைகள் மற்றும் மாற்று ஏற்பாடு

உயர்நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டி அனுமதி மறுக்கப்பட்டதால், அ.தி.மு.க.வினர் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். காவல்துறையினர் தரப்பில், பிரசாரத்தை பட்டா இடத்தில் (தனியார் இடத்தில்) நடத்திக் கொள்ளலாம் என்றும், மேலும், இபிஎஸ் பிரசாரத்தில் 2,000 முதல் 3,000 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சூழலில், எடப்பாடி பழனிசாமியின் பிரசாரத்துக்காக மாற்று இடங்களுக்கு அனுமதி பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.