அரசியல்

"திமுகவோடு போட்டி போட தகுதியே இல்லை"- விஜய்யை மறைமுகமாக சாடிய அமைச்சர் கே.என். நேரு

"எங்களுக்கும் திமுகவுக்கும் தான் நேரடி போட்டி என்று கூறுபவருக்கு திமுகவோடு போட்டி போட தகுதியே இல்லை" என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.


TVK Vijay and K.N.Nehru
எங்களுக்கும் திமுகவிற்கும் தான் நேரடியாகப் போட்டி என ஒருவர் கூறுகிறார். திமுகவுடன் போட்டி போட அவருக்குத் தகுதியே இல்லை" என திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு பேசினார்.

திருவாரூர் தெற்கு வீதியில், "தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்", "ஓரணியில் தமிழ்நாடு" தீர்மான ஏற்பு பொதுகூட்டம் திமுக சார்பில் நேற்று நடைபெற்றது. திருவாரூர் மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பூண்டி கலைவாணன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், சுமார் 30,000 பேர் கலந்துகொண்டனர்.

இதில், சிறப்புரையாற்றிய அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:

திமுகவுடன் போட்டி போடத் தகுதியில்லை

"இன்று எங்களுக்கும் திமுகவிற்கும் தான் நேரடியாகப் போட்டி என ஒருவர் சொல்கிறார். திமுகவுடன் போட்டி போட அவருக்குத் தகுதியே இல்லை என்று கூறிக்கொள்கிறேன். திருச்சி மண்டலத்தில் இருந்து வரும் 41 எம்.எல்.ஏ தொகுதிகளில், கடந்த தேர்தலில் 4 தொகுதிகளில் மட்டுமே திமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. வரும் தேர்தலில் அந்த 4 தொகுதிகளையும் சேர்த்து வெற்றி பெறச் செய்வதுதான் எங்களது கடமையாகும்."

மத்திய அரசின் நிதி நெருக்கடி

மத்திய அரசின் மீது குற்றம்சாட்டிய அவர், "கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியின் காரணமாக இருந்த கடும் நிதிச்சுமையை நம்முடைய முதல்வர் பொறுப்பேற்ற பின்னர் சமாளித்து வருகிறார். ஒருபக்கம், திமுகவை அழிப்பதற்காக ஒன்றிய அரசு எந்த நிதியும் தமிழ்நாட்டிற்குக் கொடுக்காமல் நிதி நெருக்கடியை ஏற்படுத்த முயற்சிக்கிறது. நாம் கொடுக்கும் 9.2 சதவீத நிதியில் வெறும் 4.7 சதவீத நிதியை மட்டுமே மத்திய அரசு திருப்பி வழங்குகிறது."

"கல்விக்கு உரிய நிதி, ஜல் ஜீவன் குடிநீர் திட்டத்திற்கான நிதி என எதையும் கொடுப்பதில்லை. இந்தியாவிலேயே சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 10 பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் உள்ளன. கல்வியில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதை ஒன்றிய அரசே ஒப்புக்கொண்டுள்ளது" என்றும் அவர் தெரிவித்தார்.

திமுகவின் சிறப்பான ஆட்சி

"5 முறை முதல்வராக இருந்த நமது தலைவர் கலைஞர் காலத்தை விட, தற்போது நான்கரை ஆண்டு கால ஆட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூடுதலான திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக ஒரு லட்சம் பேர் பணியில் சேர்ந்துள்ளனர். தமிழகத்தில் தான் இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகள் உள்ளன. மேலும், தொழிற்சாலைகளில் அதிக அளவில் பெண்கள் பணியாற்றுவதும் தமிழகத்தில்தான்" என்று கே.என்.நேரு கூறினார்.