அரசியல்

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடம்.. தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழ்நாடு மற்றும் அசாம் மாநிலங்களில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் தேதியினை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடம்.. தேர்தல் தேதி அறிவிப்பு
rajya sabha elections date announced
வைகோ, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரின் மாநிலங்களவை உறுப்பினருக்கான பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதி உடன் நிறைவடைய உள்ள நிலையில் ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மாநிலங்களவை உறுப்பினர்கள் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இது இந்திய அரசியலமைப்பின் விதிகளின் படியும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் விதிகளின் படியும் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின் விவரம் பின்வருமாறு-

அசாம் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 8 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூன்-ஜூலை மாதத்தில் நிறைவடைகிறது. காலியாகும் மாநிலங்களவை உறுப்பினருக்கான பதவியிடங்களை நிரப்பும் வகையில் வருகிற ஜூன் மாதம் 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. அதுத்தொடர்பான விவரங்கள் பின்வருமாறு-

ஓய்வு பெறும் உறுப்பினர்கள் விவரம்:

அசாம்: (2 இடங்கள்) (பதவிக்காலம் முடியும் தேதி: 14.06.2025)

1. மிஷன் ரஞ்சன் தாஸ்
2. பீரேன்ட்ரா பிரசாத் பைஸ்யா

தமிழ்நாடு: (6 இடங்கள்) (பதவிக்காலம் முடியும் தேதி: 24.07.2025)

1. டாக்டர் அன்புமணி ராமதாஸ்
2. எம்.சண்முகம்
3. எம்.சந்திரசேகரன்
4. எம்.முகமது அப்துல்லா
5. பி.வில்சன்
6. வைகோ

தேர்தல் அட்டவணை விவரங்கள்:

தேர்தல் தொடர்பான அறிவிக்கை வெளியிடுதல்: ஜூன் 02, 2025 (திங்கட்கிழமை)
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி: ஜூன் 09, 2025 (திங்கட்கிழமை)
வேட்புமனுக்களை ஆய்வு செய்தல்: ஜூன் 10, 2025 (செவ்வாய்க்கிழமை)
வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி: ஜூன் 12, 2025 (வியாழக்கிழமை)
வாக்குப்பதிவு தேதி: ஜூன் 19, 2025 (வியாழக்கிழமை)
வாக்குப்பதிவு நேரம்: காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை
வாக்கு எண்ணிக்கை: ஜூன் 19, 2025 (வியாழக்கிழமை) மாலை 05:00 மணிக்கு
தேர்தல் செயல்முறைகள் நிறைவடையும் தேதி: ஜூன் 23, 2025 (திங்கட்கிழமை)

சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் பணி நீட்டிப்பு காலத்தில் இருப்பதால், தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூடுதல் செயலாளர் சுப்பிரமணியன் மாநிலங்களவை தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருப்பார் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.